கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுடைய பணி நேரப் பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் விரைந்து தீர்வுகாண அரசு அலுவலர்களுக்கு மு.க. ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் வேட்டி - சேலை வழங்கும் திட்டம், பள்ளி மாணவ - மாணவியருக்கான விலையில்லா சீருடை வழங்கும் திட்டம், முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான வேட்டி - சேலை வழங்கும் திட்டம் ஆகிய அரசுத் திட்டங்களைச் செயல்படுத்திவருவதோடு, நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்குச் சந்தைப்படுத்துவதில் உறுதுணையாக இருந்து கைத்தறி ரகங்களைப் பிரபலப்படுத்துதல், வாடிக்கையாளர்களின் மாறிவரும் ரசனைக்கேற்ப பாரம்பரியம், நவீன ரகங்களை உருவாக்குதல், பல்வேறு வகையிலான புதுமையான திட்டங்களைச் செயல்படுத்துதல், கைத்தறி நெசவாளர்களுக்குத் தொடர் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டுவரும் நிறுவனமாக ' கோ-ஆப்டெக்ஸ் ' விளங்குகிறது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கைத்தறித் துறைக்கு என தன்னிகரற்ற பங்களிப்பை அளித்துவருவதோடு, நெசவாளர்களுக்கு நீடித்த வேலைவாய்ப்பினை வழங்கி, தன்னுடன் இணைக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேலான கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் துணிகளை நாடு முழுவதும் விற்பனை செய்துவருகிறது.
நேர நீடிப்பு
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனையகங்களில் பல ஆண்டுகளாக இரவு 8 மணிவரை இருந்த பணி நேரம் தற்போது இரவு 9 மணி வரை என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் 20 கிலோ மீட்டர், 30 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பல பேருந்துகள் மாறி பணிக்கு வரும் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பேருந்துகள் கிடைக்காமல் பெண்கள் அவதிப்படக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது.