சென்னை:இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஏப்.30) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு தளர்வில்லா ஊக்கத்தோடு செயல்படுவதனால்தான் முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கி மாநிலப் பொருளாதாரத்தை வலுவடையச் செய்துள்ளது என்று ஒரு பக்கம் தொழில் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தாலும், மறுபக்கம் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொழிற்சாலைகளை மூடுகின்ற துர்ப்பாக்கியமான நிலை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனம், விற்பனை பாதிப்பு மற்றும் தொடர் இழப்பு காரணமாக சென்னை மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையை மூடுவதாக அறிவித்தபோது, ஃபோர்டு நிறுவன நிர்வாகிகளிடமும், தொழிலாளர்களிடமும் அரசு பேச்சுவார்த்தை நடத்தி அந்த நிறுவனம் தொடர்ந்து இயங்கவும், தொழிலாளர்களின் வேலையிழப்பினை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் நான் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இருப்பினும், தமிழ்நாடு அரசு சார்பில் முனைப்பான நடவடிக்கைகள் எடுக்காததன் காரணமாக அந்த நிறுவனம் மூடப்படும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில், ஜப்பான் நாட்டின் நிசான் மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனமான நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஒரகடத்தில் டாட்சன் வகை கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த நிலையில், மந்தமான கார் விற்பனை காரணமாக, தற்போது அதன் உற்பத்தியை நிறுத்தப் போவதாகவும், இருப்பில் உள்ள வாகனங்களை மட்டும் விற்பனை செய்யப் போவதாகவும், ஏற்கெனவே உள்ள வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் தொடர்ந்து கிடைக்கவும், விற்பனைக்கு பிந்தைய சேவைகள் அளிக்கப்படும் என்றும் நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்ட உத்தரவாதம், அதாவது Warranty பூர்த்தி செய்யப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.