சேலம்: நெய்க்காரப்பட்டியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நேற்று (பிப்.9) நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை அப்படியே அடிபிறழாமல் செயல்படுத்தியவர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் தொலைநோக்கு பார்வையுடன் வாக்குறுதிகளை தருவார். அதை நிறைவேற்றியும் தந்தார். மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தந்தார்.
ஏழைகளுக்கு வீடுகள், திருமண உதவித் தொகை, தாலிக்கு தங்கம் என்று வழங்கியவர் ஜெயலலிதா. மகப்பேறு நிதியுதவியை ரூ.18 ஆயிரமாக உயர்த்தி தந்தார். கல்வி மேம்பாட்டிற்கு திட்டங்களை வகுத்தார். உலக தொழில் முதலீடுகளை தமிழ்நாடு கொண்டு வந்தார். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மின்தடை இல்லை. அதிமுக ஆட்சி சிறப்பாக நடந்தது.
நடைபெற்று முடிந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சி அமைத்தது. அவர்களது 8 மாத கால ஆட்சி பல்வேறு குளறுபடிகளுடன் நடந்து வருகிறது. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் ரத்து என்றார் ஸ்டாலின். இருப்பினும் இதுவரை ரத்து செய்யவில்லை. நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான், அதிமுக நிலைப்பாடு.