அக்கடிதத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களை இடபற்றாக்குறை காரணமாக அழைக்க வேண்டாம் என எடுக்கப்பட்ட முடிவிற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக ஓ பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக கழகத்தின் பிற அணி நிர்வாகிகள் , முன்னாள் அமைச்சர்கள் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் , முன்னாள் வாரியத் தலைவர்கள் மற்றும் கட்சிக்காக தியாகம் செய்தவர்கள் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பது உண்டு; ஆண்டாண்டாக பின்பற்றப்படும் நடைமுறை இம்முறை பின்பற்றப்படாது என்ற தகவலை அறிந்தவர்கள் தங்களையும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்க தன்னை தொலைபேசி வாயிலாகவும் , நேரிலும் சந்தித்து கோரிக்கை வைத்ததாகவும் இடப்பற்றாக்குறை என கூறுவது ஏற்புடையதாக இல்லை என்று ஆதங்கம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி ஒற்றை தலைமை இரட்டை தலைமை என கட்சி விதிகளுக்கு எதிராக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் கழக தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது; சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது; மேலும் பொதுக்குழுவில் விவாதிக்கப்படுவது தொடர்பான தகவல் எதுவும் கிடைக்கவில்லை என மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் முறையிட்டுள்ளனர் என்பதையும் ஓ பன்னீர் செல்வம் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.