தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்.. இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்.. - தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்

அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்ப இருப்பதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 18, 2023, 10:47 PM IST

சென்னை:அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 18) வேட்புமனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அதோடு பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், வைத்திலிங்கம் ஆகியோர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுத்துள்ளனர். தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதத்தில், "அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை சட்டவிரோதமாக அறிவித்துள்ளனர். கடந்த வருடம் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அதையும் மீறி தேர்தல் ஆணையாளர்களாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணத்தின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தான் இருக்கிறது என்பதை சுட்டிகாட்டுகிறேன். தற்போது வரை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் முழு நிர்வாகத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த நிலையில், ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்புதல் பெறாமல் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பொதுச் செயலாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட தேர்தல் சட்டவிரோதமானது, தவறானது மற்றும் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல. பொதுக்குழு செல்லும் என்று மட்டுமே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து உரிமையியல் (சிவில்) வழக்கு தொடரலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்குகளில் வாதங்கள் நடந்து வருகின்றன. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடருவதால் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அட்டவணையை அறிவித்து வெளியிடப்பட்ட செய்தி தவறானது. உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கின் தீர்ப்பு வராமல் அதிமுகவின் பதவிகள் மாற்றம் தொடர்பாக எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன்" குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை.? அவசர வழக்கு நாளை விசாரணை..

ABOUT THE AUTHOR

...view details