சென்னை:முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி தலைமையிலான அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ மண்டபத்தில் இன்று (டிசம்பர் 21) காலை 10 மணி அளவில் நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு பிறகு பல்வேறு முக்கிய முடிவுகளை ஓபிஎஸ் அறிவிக்க உள்ளார்.
அந்த வகையில், ஓபிஎஸ் தலைமையில் பொதுக்குழு தேதி அறிவிப்பு, ஓபிஎஸ் நியமித்துள்ள மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு, சசிகலா மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடனான கூட்டணி, இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து முடிவுகள் வெளியிட வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தில் மொத்தமாக 100 தலைமை கழக நிர்வாகிகள், 80-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, பெரியகுளம் பண்ணை வீட்டில், தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அதில் பல்வேறு மாவட்டங்களின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைகளுக்கு பின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அறிவித்தார்.
மறுப்புறம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் டிசம்பர் 27ஆம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து காலஅவகாசம் கேட்டுவருகிறது. இதனால் வழக்கு விசாரணை ஜனவரி மாதம் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மா.செ கூட்டத்திற்குப் பின் விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம்? - ஓபிஎஸ் பதில்