சென்னை:இது குறித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசாங்க அலுவலகப் பணிகளில் தலையிடுவது, அரசு ஊழியர்களை மிரட்டுவது, பொதுமக்களை மிரட்டுவது, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது என்ற வரிசையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல் துறையினருக்கே பாலியல் தொந்தரவு கொடுக்கும் நிலைக்கு திமுகவினர் சென்று விட்டார்கள்.
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. மாறாக, சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. சென்னை விருகம்பாக்கம், தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், "கல்லூரிக்கு கனவுடன் செல்கிற மாணவ, மாணவிகளுக்கு ஒரு தந்தையாக, ஒரு சகோதரராக திமுக ஆட்சி விளங்குகிறது" என்று மேடையில் பேசப்பட்டுக் கொண்டிருந்தபோது, 129வது வட்ட திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த இருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
தொல்லை கொடுத்த திமுகவினரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தபோது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் ஆளும் கட்சியினரின் தலையீட்டைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல் துறையினர் விட்டுவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.
திமுகவினரின் இந்த அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. குற்றம் செய்வோரை விடுவித்து விடுவது என்பது குற்றங்களை அதிகரிக்க வழிவகுக்கும். இதன்மூலம், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சீரழிந்து கொண்டு வருகின்ற சட்டம்-ஒழுங்கு மேலும் சீரழியக் கூடும். மேலும், பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை விடுவிப்பது என்பது பாலியல் குற்றத்திற்கு திமுக அரசு துணை போவதற்கு சமம்.
திமுக அரசின் இந்த நடவடிக்கை வேலியே பயிரை மேய்வதுபோல் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டே இருக்கின்ற இந்த நிலையில், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தாதா கஞ்சிபாணி இம்ரான் மற்றும் அவருடைய கூட்டாளிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி இருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.