சென்னை: அதிமுகவில் மீண்டும் சசிகலா முக்கிய பதவியோடு ரீஎன்ட்ரி கொடுக்க டெல்லி பாஜக வட்டாரம் பச்சைக்கொடி காட்டியதாகவும், அதனால் எடப்பாடி பழனிசாமி பணிந்ததாகவும் கூறப்படுகிறது.
ஒன்றிணைந்த அதிமுக: பாஜக நாட்டம்
ஒன்றிணைந்த அதிமுக என்பதில் தீவிரம் காட்டி வரும் பாஜக தலைமை, சசிகலாவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரிடமும் வலியுறுத்தியுள்ள பின்னணியில், அதிமுக-வில் சசிகலாவின் ரீ-எண்ட்ரி க்கான தடை நீங்கியுள்ளது என தெரியவருகிறது. தலைநகர் டெல்லி சென்றுள்ள ஓபிஎஸ்-இபிஎஸ், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஓபிஎஸ் - இபிஎஸ் கோரிக்கை:
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைப்பதற்காக இவர்கள் பயணம் டெல்லி பயணம் சென்றதாக சொல்லப்பட்டாலும், சசிகலா விவகாரம் முக்கியமாக பேசப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தனது மகன் ரவிந்திரநாத்-க்கு மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்ததாகவும் பேசப்படுகிறது. ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்து செல்லாமல், தனித்தனியே டெல்லிக்கு விமானத்தில் சென்றது குறிப்பிடத்தக்கது.
நழுவிய எடப்பாடி பழனிசாமி:
பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அறையில் இருவரும் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம் சசிகலா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்காமல் சென்றார்.
சசிகலா ஆடியோ மற்றும் நேர்காணல்: எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், அதிமுக தொண்டர்களிடம் தொலைபேசி மூலம் பேசி வரும் சசிகலா, அதிமுகவை கட்டாயம் மீட்டெடுப்பேன், அரசியலுக்கு மீண்டும் வருவேன் என தெரிவித்து வருவது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சசிகலாவுடன் பேசும் அதிமுக நிர்வாகிகளை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி வருகிறது அதிமுக தலைமை. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான ஒரு சில மாவட்ட செயலாளர்கள் மட்டுமே சசிகலாவுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக பல்வேறு நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் இருப்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் மோடி உடனான சந்திப்பில் சசிகலா குறித்து பேசப்பட்டுள்ளது.