சென்னை: நாட்டில் செயற்கை கருத்தரித்தலை முறைப்படுத்தும் வகையில், இனப்பெருக்க தொழில்நுட்ப முறைப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு, 2021ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த சட்டப்பிரிவுகளை எதிர்த்து கருமுட்டை வாங்கும் பெண்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதில், "இனப்பெருக்க தொழில்நுட்ப முறைப்படுத்துதல் சட்டத்தில் கரு முட்டைகளை அதற்கான வங்கிகளில் இருந்து மட்டுமே பெற வேண்டும், 23 வயது முதல் 35 வயது வரையிலான பெண்களிடம் அவர்களின் ஆயுட்காலத்தில் ஒரு முறை மட்டுமே கருமுட்டைகளை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு தம்பதியருக்கு ஒரு முறைக்கு மேல் கரு முட்டைகளையோ? விந்தணுக்களையோ? வழங்கக் கூடாது எனவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் நடத்திய ஆய்வில், ஒரு பெண் தனது வாழ்நாளில் ஆறு முறை வரை கருமுட்டை தானம் வழங்கலாம் என கண்டறிந்துள்ளதால், இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் மருத்துவ ரீதியாக சாத்தியமற்றது. இந்த சட்டம் அமலுக்கு வந்து பல மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை கரு முட்டை வங்கிகள் அமைக்கப்படவில்லை.