வேலூர்: காட்பாடியை சேர்ந்தவர் அமுதா (26). சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முந்தினம் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் தனது நண்பர் மூலமாக அறிமுகமான அஜய் ராஜேஷ் என்பவர், தான் சிங்கப்பூரில் வேலை செய்வதாகவும் அங்கு வேலை வாங்கி தருவதாக கூறி கூகுள் பே மூலம் ரூபாய் ஐம்பதாயிரத்தை தன்னிடம் இருந்து பெற்றதாக கூறியுள்ளார்.
பத்து மாதங்கள் ஆகியும் வேலை வாங்கி தராததால் அமுதா, அஜய் ராஜேசிடம் தான் அனுப்பிய பணத்தை திரும்பி கேட்டுள்ளார். அப்போது பணத்தை தர மறுத்ததோடு மட்டுமில்லாமல் தன்னை ஆபாச வார்தைகளில் திட்டியதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரியும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இதனையடுத்து தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் சைபர் செல் சிறப்பு குழுவை சேர்ந்த ஆய்வாளர் கலைச்செல்வி, உதவி ஆய்வாளர் சென்பகவள்ளி ஆகியோர் கூகுள் பே மூலம் பணத்தை அனுப்பிய வங்கி கணக்கினை கொண்டு விசாரணை நடத்தியதில் அது அஜய் ராஜேஷ் மனைவி பாரதி (26) வங்கி கணக்கு என்பதை கண்டு பிடித்தனர்.
இதனையடுத்து பெரம்பலூர் மாவட்டம் வயலூர் பகுதியில் மோசடிக்கு உடந்தையாக இருந்த அஜய் ராஜேஷ் மனைவி பாரதியை கைது செய்த போலீசார் குரோம்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான சிங்கப்பூரில் உள்ள அஜய் ராஜேசை கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:அரசு அலுவலர்கள், காண்ட்ராக்ட் ஊழியர்களை வெளுத்து வாங்கிய அமைச்சர்கள்