சென்னை:ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து பலர் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர் கதையாகி வருகிறது. இதுபோன்ற விளையாட்டுக்களுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என பல தரப்பில் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
பரிந்துரைகளை அளிக்க குழு: இதுதொடர்பாக பரிந்துரைகளை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில், குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன், ஸ்னேகா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே, சட்டத்துறை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் இடம்பெற்றனர். இக்குழுவினர் பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளை கேட்டனர். பின்னர் பல்வேறு தரவுகளின் அடிப்படையிலும், பிற மாநிலங்களில் உள்ள சட்டங்களை ஆய்வு செய்தும், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு, அரசுக்கு 2022 ஜூன் மாதம் 27ம் தேதி பரிந்துரைகளை அளித்தது.
அவசர சட்டத்துக்கு ஒப்புதல்:அதன்பிறகு பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக்கல்வித்துறை மூலம் கணக்கெடுப்பு, பொதுமக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு
26. 9.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் ஆளுநருக்கு அனுப்பி வைத்து அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஒப்புதல் வழங்கினார்.
மசோதா நிறைவேற்றம்: இதைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடரில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். அந்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி 8 கேள்விகளை அரசிடம் விளக்கமாக கேட்டிருந்தார். அதற்கும் அரசு விளக்கம் அளித்தது.
திருப்பி அனுப்பப்பட்ட மசோதா: இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கான மசோதாவை ஆளுநர் ரவி கடந்த 8ம் தேதி அரசுக்கு மீண்டும் திருப்பி அனுப்பி உள்ளார். ஆன்லைன் உள்ளிட்ட விளையாட்டுகளில் ரேண்டம் எண் தான் முக்கியப் பங்கினை வகிக்கிறது. கம்ப்யூட்டர் மூலம் விளையாடும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் தான் யாரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்கிறது. விளையாடும் போது ஒரு திறமை உள்ளவர் எதிர்புறத்தில் இருப்பதில்லை. இதனால் மற்றவரை எளிதில் அவர் வெற்றி கொள்ள முடியும். நேரடியாக விளையாடும் போது திறனை வளர்க்க முடியும். ஆனால் ஆன்லைன் மூலம் விளையாடும் போது ஏமாற்றப்படுவார்கள் என்பது கம்ப்யூட்டர் வல்லுநர்களின் வாதம்.