கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (48). இவர் கடந்த 19ஆம் தேதி இரவு 11 மணி அளவில் கொடுங்கையூர் வாசுகி நகர் 7ஆவது தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாசுகி கழுத்தில் இருந்த இரண்டு சவரன் தங்கச் செயினை அறுத்துக் கொண்டு ஓடினார்.
இதனையடுத்து ராஜேஸ்வரி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் செயின் பறிப்பு சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் கொடுங்கையூர் காவலர்கள் சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சிறுவனின் புகைப்படத்தைக் கொண்டு அப்பகுதி முழுவதும் விசாரித்து, கண்டறிந்தனர். பின்னர் சிறுவனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், அந்தச் சிறுவன் பெரம்பூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது.