சென்னை:தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்கும் நோக்கில், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமான வரித்துறை சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்டவற்றை மின்னணு முறையில் வழங்க அரசு கொள்கை முடிவு எடுத்ததன் அடிப்படையில் வருவாய் துறை சார்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
பழங்குடியின மக்கள் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் போது, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோரின் ஒப்புதல் மற்றும் கருத்துகளை கேட்டறிந்து ஆன்லைன் வாயிலாகவே டிஜிட்டல் கையெழுத்துடன் கூடிய சான்றிதழ் வழங்க வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் மனு
இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக இருந்த அண்ணாமலை ஐஏஎஸ், தகுதியற்ற நபர்கள் முறைகேடாக பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்குவதை தடுக்க வேண்டும் என தெரிவித்து, இனி பழங்குடியின மக்களுக்கு ஆன்லைன் வாயிலாக சாதி சான்றிதழ் வழங்கக்கூடாதென அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கும் தனிப்பட்ட முறையில் கடிதம் ஒன்றை எழுதினார்.
இதன் காரணமாக ஆன்லைன் வாயிலாக பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்குவது நிறுத்தப்பட்ட நிலையில் அதனை எதிர்த்தும், மற்ற சாதியினருக்கு வழங்கப்படுவது போல பழங்குடியின மக்களுக்கும் ஆன்லைன் வாயிலாக சாதி சான்றிதழ் வழங்க கோரியும் ஆதி பழங்குடி நல சங்கத்தின் பொது செயலாளர் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.