சென்னை: கரோனா மூன்றாவது அலை அதிகரித்துவரும் நிலையில் 10, 11, 12ஆம் வகுப்புகளின் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதைத் தவிர்க்கும்படியும், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்துபடியும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நேரடி வகுப்புகள்
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்குத் தடை விதித்து, ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிடக் கோரி நெல்லையைச் சேர்ந்த அப்துல் வஹாபுதீன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டு, ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடத்தப்பட்டதாகவும், தற்போது கரோனாவின் மூன்றாவது அலை மிகத் தீவிரமாகப் பரவி வரும் சூழலில், 1முதல் 9ஆம் வகுப்பு வரை மட்டுமே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெறுவதாகவும், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அந்த மாணவர்கள் எளிதாகக் கரோனாத் தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், இவற்றை கருத்தில் கொண்டு சிபிஎஸ்சி, மெட்ரிகுலேஷன், மற்றும் மாநில பாடத்திட்டத்தின் கீழான பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்குத் தடை விதித்து, ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆன்லைன் வகுப்புக்கு அறிவுறுத்தல்
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மழலையர் வகுப்புகள் மற்றும் 1 முதல் 9 வரை நேரடி வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது என்றும், 10 முதல் 12 வரையிலான வகுப்புகளின் மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவே பள்ளிக்கு அழைக்கப்படுபதாகவும், நேரடி வகுப்புகள் நடத்துவதும், கலந்து கொள்வதும் கட்டாயமில்லை எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து பள்ளிகள் முடிவெடுக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்துள்ளதாகவும், மேலும் நேரடி வகுப்புகள் நடத்தினால் கலந்து கொள்வது மாணவர்களின் விருப்பத்திற்குட்பட்டது என்றும் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள்,மூன்றாவது அலை அதிகரித்துவரும் நிலையில் 10, 11, 12ஆம் வகுப்புகளின் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்கும்படியும், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்துபடியும் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் ஆசிரியர்கள், மாணவர்களும், பணியாளர்கள் என அனைவரின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் எனத் தெரிவித்தனர்.
அரசின் கொள்கை முடிவை மீறி இவ்வாறு பள்ளிகளை மூடும்படி உத்தரவிட முடியாது என்றும், எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், மரணம் அடைந்துள்ளார்கள் என்ற விவரங்கள் ஏன் இடம் பெறவில்லை என்றும் கேள்வி எழுப்பினர். வழக்கறிஞர்கள் பொது நல வழக்கு தொடரக்கூடாது என உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி அபராதம் விதிக்கப்போவதாக எச்சரித்தனர்.
இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் அப்துல் வகாபுதீன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:மூன்று அமைச்சர்களுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு அரசாணை