சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் 2023-2024ஆம் கல்வி ஆண்டில் சேர்வதற்கு இன்று (ஜூன்.19 ஆம் தேதி) காலை 10 மணி முதல் விண்ணப்பப் பதிவு துவங்கியுள்ளது. மேலும் 28ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும் இதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் உள்ள இடங்களின் விவரங்களையும், அந்தப் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு குறித்தும் இந்தத் தொகுப்பில் காணலாம். "தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பி.எஸ்சி மற்றும் பிஓடி, பிபிடி, பி.பார்ம் , பிஏஎஸ்எல்பி ஆகிய பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பங்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் பெறப்படுகிறது.
மேலும் தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் www.tnhealth.tn.gov.in/ www.tnmedicalselection.orgஎன்ற இணையதள முகவரியில் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் வரும் 28ஆம் தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் விண்ணப்பிக்க விரும்பும் பாடப்பிரிவுகளை தெரிந்துகொண்டு, விண்ணப்பிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் சென்றும் விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கான கலந்தாய்வு ஒற்றைச் சாளரமுறையில் நடத்தப்படும்.