பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு கடந்த ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் மாவட்டந்தோறும் 42 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டன. மாணவர்கள் அங்கு சென்று விண்ணப்பித்தனர். அதனைத்தொடர்ந்து, மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டன. அதன் பின்னர் மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில், பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வினை நடத்துவதற்கு புதிய குழுவினை அமைத்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையை ஏற்க முடியாது என தெரிவித்து, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அதன் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி கழகம் நடத்தும் என உயர்கல்வித்துறை அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து, ஆன்லைனில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொழில் நுட்ப கல்வி இயக்கம் தொடங்கியுள்ளது. தொழில்நுட்ட கல்வி இயக்கத்தின் ஆணையர் விவேகானந்தன் அதற்கான ஆலோசனைக் கூட்டத்தினை நடத்தியுள்ளார். அப்போது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. அதன்பின்னர், ஆன்லைன் முலம் விண்ணப்பங்களை பெறுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், கட்டாயம் மின்னணுமுறையில் அளிக்கப்பட்ட டிஜிட்டல் கையொப்பம் கொண்ட சான்றிதழ்களை அதற்குரிய அதிகாரிகளிடம் இருந்து பெற்று அளிக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சிஏ., எம்.பி.சி மற்றும் டி.என்.சி, பி.சி, பி.சி.எம் ஆகியோர் சாதி சான்றிதழ்களையும், முதல் பட்டதாரிகள் அதற்கான சான்றிதழையும், தேவைப்படுபவர்கள் இருப்பிட சான்றிதழும், வருமான சான்றிதழும் அளிக்க வேண்டும். எனவே இந்த சான்றிதழ்களை அளிக்க தகுதியான அதிகாரிகளிடம் பெற்று வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார்.