சென்னை: தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியைச்சேர்ந்தவர், ஜெயசீலன். டேக்ஸ் கன்சல்டன்சி நடத்திவருகிறார். கடந்த மாதம் 9ஆம் தேதி அவரது தாயாரை பார்ப்பதற்காக சிவகங்கை மாவட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 92 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைத்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சென்னை வில்லிவாக்கம் பகுதியைச்சேர்ந்த குற்றவாளி சூர்யா என்பவரை கடந்த மாதம் 17ஆம் தேதி கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை அயனாவரம் பகுதியைச்சேர்ந்த முகமது ரியாஸ் என்பவர் உடன் சேர்ந்து கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து அவரிடமிருந்து சுமார் 62 சவரன் தங்க நகைகள், இரண்டு சொகுசு கார், இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் தலைமறைவாக இருந்த முகமது ரியாஸை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் கொள்ளையன் முகமது ரியாஸ் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசனுக்குத்தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் ஒட்டன்சத்திரம் சென்று அவரது சொந்த வீட்டில் பதுங்கி இருந்த முகமது ரியாஸை கைது செய்து, தாம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை சென்னையில் மார்வாடி கடையில் விற்பனை செய்ததாகத் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் 34 சவரன் தங்க நகைகளையும், இரண்டரை கிலோ வெள்ளிப்பொருட்களையும், ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் முகமது ரியாஸ் மீது தாம்பரம், குரோம்பேட்டை, மாதவரம், எழும்பூர் உட்பட 13 காவல் நிலையங்கள் வழிப்பறி,கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பரந்தூரில் விவசாய நிலங்களைத்தவிர்த்து மற்ற இடங்களில் விமான நிலையம் அமைக்கலாம் - பூவை.ஜெகன்மூர்த்தி