சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை யானைகவுனி பகுதியில் ஆந்திராவைச் சேர்ந்த நகை வியாபாரி சுப்பு ராவ் மற்றும் அவரது மேலாளர் ரகுமான் ஆகியோர் நகை வாங்குவதற்காக ஒன்றரை கோடி ரூபாய் பணத்துடன் ஆட்டோவில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆட்டோவை மறித்த சிலர் காவல்துறையினர் என கூறி விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
கணக்கில் வராத பணத்தை கொண்டு வருவதாக இருவரிடம் விசாரணை நடத்தியவர்கள், பணத்தை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. பணத்தை மீட்கச் சென்ற போது தங்களிடம் விசாரணை நடத்தியவர்கள் திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர் என சுப்பு ராவிற்கு தெரியவந்தது. காவல் வாகனம், லத்தி, கை விலங்குடன் வந்த நபர்களை காவல்துறையினர் என நம்பி ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை சுப்பு ராவ் கொடுத்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக யானைகவுனி காவல்துறையினரிடம் சுப்புராவ் புகார் அளித்துள்ளார். சுப்பு ராவ் அளித்த புகாரின் அடிப்படையில், ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கொள்ளை நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது சிபிசிஐடி, மாவட்ட மத்திய குற்றப்பிரிவு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ஆயுதச் சட்டம் உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல கொள்ளையன் இம்ரான் என்பது தெரிய வந்தது.
குறிப்பாக வேலூர், தஞ்சாவூர், விழுப்புரம், குடியாத்தம், தாம்பரம், கொடுங்கையூர், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 17 வழக்குகள் இம்ரான் மீது நிலுவையில் உள்ளதாக போலீசார் கூறினர். கள்ளக் காதல் விவகாரத்தில் சென்னையிலிருந்து தப்பிச் சென்று வேலூரில் காவலரையே கார் ஏற்றிக் கொல்ல முயன்ற நபர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது மட்டுமின்றி கடந்த 2021ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, வெடிகுண்டு, துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு இம்ரான் பிடிப்பட்டுள்ளார். இவ்வாறு பல்வேறு பயங்கர வழக்குகளில் தொடர்புடைய கொள்ளை கும்பலை சேர்ந்த இம்ரான் தலைமையிலான கும்பலே, நகை வியாபாரிகளிடமிருந்து ஒன்றரை கோடி பணத்தை காவல்துறையினர் என நாடகமாடி கொள்ளை அடித்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறினர்.
ஹவாலா பரிமாற்றம் மற்றும் கணக்கில் வராத பணத்தை எடுத்துக் கொண்டு வரும் நகை வியாபாரிகளை கண்டறிந்து, அவர்களை குறி வைத்து கொள்ளையடித்து வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதி தலைமையில் ஐந்து தனிப்படை காவல்துறையினர் கொள்ளை கும்பல் தலைவன் இம்ரானையும் மற்றும் கூட்டாளிகளையும் பிடிக்க தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆவணமில்லாத ரூ.20 லட்சம் பறிமுதல்: ஹவாலா பணமா?