சென்னை:தமிழ் சினிமாவில் தனித்துவமிக்க இயக்குநராக அறியப்படுபவர், பா.ரஞ்சித். இவரது இயக்கத்தில் வெளியான மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்ட நிலையில், தற்போது சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். எளிய மனிதர்களின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டுவதில் ரஞ்சித் கில்லாடி.
அதுவும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வையும் அவர்களின் வலிகளையும் தனது படங்களின் வழியாக தொடர்ந்து பேசி வருபவர். இவரது வழியில் மாரி செல்வராஜ், ஞானவேல் போன்ற இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையை தங்களின் திரைப்படங்கள் வழியாக பேசி வருகின்றனர். இவர்களுக்கு முன்னோடியாக பா.ரஞ்சித் பார்க்கப்படுகிறார்.
தற்போது, இவர் விக்ரம் நடிக்கும் தங்கலான் என்ற படத்தை இயக்கி வருகிறார். நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கும் படம் இதுவாகும். விக்ரம் பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு இந்த படத்தில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இந்த மாதம் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது. தங்கலான் படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
தங்கலான் திரைப்படம் உலக மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று சமீபத்திய பேட்டியில் ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். மேலும், இதன் படப்பிடிப்பு கேஜிஎப் பகுதியில் சமீபத்தில் நடைபெற்றது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் 80 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.