கரோனா பாதிப்பு காரணமாக போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், ஊரடங்கு காலத்தில், பேருந்துகள் இயங்காத நேரத்தில் செலுத்திய சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்ததால் தனியார் பேருந்துகள் சேவை இயக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட 950 பேருந்துகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் 30ஆம் தேதிவரையிலான காலகட்டத்திற்கு சாலை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வரும் 16 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் சான்றளிப்பார் என்றும், போக்குவரத்து ஆணையர், பேருந்துகளுக்கு சாலை வரியில் இருந்து விலக்கு அளிப்பர் என்றும் பேருந்து உரிமையாளர்கள் கூறுகின்றனர்.