சென்னை:நீண்ட விடுமுறையை முடித்துவிட்டு மக்கள் வேலை பார்க்கும் இடத்திற்குச் செல்ல உள்ள நிலையில், இன்று மாலை 6 மணி முதல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பு சார்பில் திடீர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் இல்லாத போதிலும் அரசுக்கும், பயணிகளுக்கும் பாதிக்காத வண்ணம் சங்கங்களே கட்டணம் நிர்ணயம் செய்து, கடந்த 2022 செப்டம்பர் மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்டணம் ஒப்புதல் பெற்று, அதே கட்டணத்தில் இன்று வரை இயக்கி கொண்டிருக்கிறோம்.
ஆனால், கடந்த 10 நாட்களாக அண்ணாநகர் சரக இணை ஆணையர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலரும், சங்கங்களுடன் இணைந்து சங்கங்கள் நிர்யணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கண்காணித்து, இன்று வரை அதிக கட்டணம் புகார் இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தன.
ஆனால் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு தவறு செய்யாமல் இயங்கிக் கொண்டிருந்த 120 ஆம்னி பேருந்துகளை, அதிக கட்டணம் என்ற பெயரில் ஆணையரின் தவறான வழிகாட்டுதலின்படி சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளை மீண்டும் சிறைபிடிப்பதை நிறுத்தக் கோரி இன்று (அக்.24) மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது. 1 லட்சத்திற்கும் மேலாக பயணிகள் இன்று பயணம் செய்ய முன்பதிவு செய்துதுள்ளனர்.