சென்னை: தமிழ்நாடு அரசு 2003ஆம் ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய ஓய்வுதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு அரசுத் துறைகளில் நியமிக்கபட்ட அனைத்து ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டமே பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கபட்டது. கடந்த 2002ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடரும்படி உத்தரவிடக்கோரி சிவசக்தி உள்ளிட்ட 25 காவலர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், 2002ஆம் ஆண்டு 3,500 காவலர்கள் தேர்வு செய்வது தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்டதாகவும், இந்த தேர்வு நடைமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபட்ட தங்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்றும் வாதிடப்பட்டது. ஆனால், 2002ஆம் ஆண்டு தேர்வு நடைமுறைகள் தொடங்கியிருந்தாலும், 2003ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் மனுதாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், புதிய ஓய்வூதிய திட்டம் தான் அவர்களுக்கு பொருந்தும் எனவும், பழைய ஓய்வூதிய திட்ட பலன்களை பெற அவர்களுக்கு தகுதியில்லை எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடபட்டது.