சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால் கனமழையை நாம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு நாம் பெருமழையைச் சந்தித்தோம். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நமக்கெல்லாம் மிகப்பெரிய சவாலாக அமைந்திருந்தது. இதேபோல் மற்ற சில மாவட்டங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
மீண்டும் அதேபோன்ற ஒரு நிலை எங்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று முடிவெடுத்து, அதற்கான வழிமுறைகளை அரசுக்கு எடுத்துரைக்க மரியாதைக்குரிய திருப்புகழ் அவர்களின் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு, அவர்கள் அளித்த ஆலோசனையின்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இம்முறையும் மழைநீர் தேங்காதவாறும், வெள்ளம் ஏற்படாதவாறும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது அனைத்து மாவட்ட நிர்வாகத்தினுடைய கடமையும் பொறுப்பும் ஆகும். அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து பேரிடர் காலங்களில் மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய முக்கிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்திற்குத்தான் இருக்கிறது. இதனை உங்களது சார்நிலை அலுவலர்கள் அனைவருக்கும் நீங்கள் உணர்த்தி செயல்பட வைக்க வேண்டும்.
குறிப்பாக, மக்களுக்கு நேரடி சேவை வழங்கும் துறைகளில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்க வேண்டும்; மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் கைப்பேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும்.