சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிவறையில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் நான்கு மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ”பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள் நிலையிலான அலுவலர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொதுப்பணி அலுவலராக நியமனம்செய்யப்பட்டு, பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகளை மேற்பார்வை செய்தனர்.
பள்ளிக் கட்டடத்தை ஆய்வுசெய்ய புதிய குழு
இடித்து அகற்றப்பட வேண்டிய கட்டடங்கள், பராமரிப்பு தேவைப்படும் கட்டடங்கள், புதிதாகத் தேவைப்படும் கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட்டு கடந்த இரு மாதங்களாகத் தகுதியற்ற நிலையில் உள்ள கட்டடங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் படிப்படியாக இடிக்கப்பட்டுவருகின்றன.
பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் 250 கோடி ரூபாய் செலவில் பராமரிப்புச் செலவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்தப் பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க ஏதுவாக ஊரக வளர்ச்சி, வருவாய், பொதுப்பணி, நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறைசார்ந்த அலுவலர்கள் கொண்ட குழுவினை அமைத்துத் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மாணவர்களுக்கு எந்த இடையூரும் இருக்கக் கூடாது
இந்தக் குழுவைக் கொண்டு அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள அனைத்துக் கட்டடங்களின் உறுதித்தன்மையைச் சரிபார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் இவ்வாறு தேவையற்ற ஆபத்தான கட்டடங்களை இடிப்பதால் வகுப்புகளை நடத்தக் கூடுதலாகத் தேவைப்படும் இட வசதிக்காகப் பள்ளி வளாகங்களுக்கு அருகில் உள்ள பிற பள்ளிக்கோ தேவைப்படின் வாடகைக்கோ தக்க இடங்களை ஏற்பாடு செய்து மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில் எவ்வித தடையுமின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநிலத் திட்ட இயக்குநராக அகத்தினும், இணை இயக்குநராக உமாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் பணியாளர் நரேஷ் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் - தொடக்கக் கல்வித் துறை இணை இயக்குநர் சசிகலாவேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்ட கண்காணிப்பாளராக கள்ளர் சீரமைப்புத் துறை இணை இயக்குநர் செல்வராஜ் நியமனம்செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கூடுதல் உறுப்பினர் சுகன்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் ஸ்ரீதேவியும் - சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநர் அமுதவல்லியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்ட இணை இயக்குநர் பாஸ்கர சேதுபதியும் - அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குநர் செல்வகுமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி, கரூர் மாவட்டங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கூடுதல் உறுப்பினர் பொன்னையாவும் - நாமக்கல், ஈரோடு மாவட்டங்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு, அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநர் பொ. குமாரும் - திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் ராஜேந்திரனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குநர் ஆனந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட அளவில் அமைக்கப்படும் குழுவுடன் சென்று பள்ளிகளின் உறுதித்தன்மை ஆய்வுசெய்து அதனடிப்படையில் அறிக்கை அளிக்க உள்ளனர். மேலும் பழுதடைந்த கட்டடங்களை இடித்துவிட்டுப் பாதுகாப்பாகப் பள்ளிகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'மாணவர்கள் பலியான விவகாரம்; தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளின் தரம் ஆய்வு செய்ய உத்தரவு'