சென்னை: நேற்று இரவு ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 281க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் விபத்து மீட்பு பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட இரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்.
விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளை செய்திடவும் மேலும், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த விபத்தில் காயமடைந்த மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் தேவையான உதவிகளை செய்திடவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. குமார் ஜயந்த், மற்றும் ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் கொண்ட குழு ஒன்றினையும் உடனடியாக அனுப்பி வைத்தார்.