மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்திந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்காத விவகாரத்தில், காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு தொடங்கி வைத்த சமூக அநீதியை பாஜக அரசும் தொடர்வது சரியல்ல என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்காமல் திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசு தொடங்கி வைத்த சமூக அநீதியை பாஜக அரசும் தொடர்வது சரியானதல்ல. அந்த தவறை சரி செய்து இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவரப்பட்ட போதே, அதைப் பின்பற்றி இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகள், பல் மருத்துவப் படிப்புகள் ஆகியவற்றில் மத்திய அரசு தொகுப்புக்கு மாநில அரசுகள் வழங்கும் அகில இந்திய அளவிலான இடங்களிலும் இந்த இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தி இருக்க வேண்டும்.