சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (அக்.2) வெளியிட்ட அறிக்கையில், "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியைக் கருத்தில் கொண்டு, இயன்ற வரை நோய் இல்லா வாழ்வை மக்கள் பெறுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை அறிவிப்பதிலும், புதிதாக மருத்துவக் கல்லூரிகளை துவக்குவதிலும், மருத்துவப் படிப்பிற்கான இருக்கைகளை அதிகரிப்பதிலும், மருத்துவமனைகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அதிக அக்கறை செலுத்தினார். பாரதப் பிரதமரும் அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில், தமிழ்நாட்டிற்கு ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கினார் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
இந்த நிலையில், 2023-2024ஆம் கல்வியாண்டிற்குப் பிறகு, புதிதாக மருத்துவக் கல்லூரி துவங்க அனுமதி அளிக்கப்படும் போது, 50, 100, 150 என்ற எண்ணிக்கையில் தான் அனுமதி அளிக்கப்படும் என்றும், 150 இருக்கைகளுக்கு மேல் அனுமதி அளிக்கப்படாது என்றும், பத்து லட்சம் மக்களுக்கு 100 மருத்துவ இருக்கைகள் என்ற குறியீட்டை மருத்துவக் கல்லூரிகள் பின்பற்ற வேண்டும் என்றும் தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே அதிக மருத்துவ இருக்கைகள் கொண்ட மாநிலம், தமிழ்நாடு தான் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள், 35 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகள் என 72 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகள் மூலம் ஆண்டிற்கு கிட்டத்தட்ட 11,600 மாணவ, மாணவியர் மருத்துவம் பயின்று வருகின்றனர். இருப்பினும், அனைத்துத் தரப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.
இதையும் படிங்க:"அதிமுக - பாஜக பிரிவு என்பது இஸ்லாமியர்கள் ஓட்டை குறித்து நாடகம்" - சுப.வீரபாண்டியன் கருத்து!