தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் நிறுத்தம்? - இருக்கும் சலுகைகளை திமுக பறிப்பதாக ஓபிஎஸ் கண்டனம்! - chief minister

O.Panneerselvam: நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் துவரம் பருப்பு, பாமாயில் போன்றவற்றை நிறுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓ பன்னீர்செல்வம்
ஓ பன்னீர்செல்வம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 11:24 AM IST

சென்னை:தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டரை ஆண்டு காலங்களில், இருக்கின்ற சலுகைகளை பறிக்கின்ற ஆட்சியாக விளங்கிக் கொண்டிருக்கின்றது என தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின் கட்டணத்தை குறைப்போம் என்று சொல்லி, மின் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்திய ஆட்சி தி.மு.க ஆட்சி. பொருளாதாரம் உயரும் வரை சொத்து வரியை உயர்த்த மாட்டேன் என்று சொல்லிவிட்டு, அதனை இரு மடங்கு உயர்த்திய ஆட்சி திமுக ஆட்சி.

ஒரு கிலோ உளுத்தம் பருப்பு மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, தற்போது வழங்கப்பட்டு வரும் பொருட்களை நிறுத்தும் முயற்சியில் தி.மு.க அரசு ஈடுபட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க ஆட்சி, இருக்கின்ற சலுகைகளை பறிக்கின்ற ஆட்சியாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.

நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2021ஆம் ஆண்டு தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் கூடுதலாக உளுத்தம் பருப்பும், சர்க்கரையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டரை ஆண்டு காலம் கடந்தும், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

மாறாக, துவரம் பருப்பிற்கு பதிலாக மஞ்சள் பருப்பு வழங்குவதும், துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முறையாக வழங்கப்படாத சூழ்நிலையும் நிலவி வந்தது. தற்போது, இதனையும் நிறுத்தப் போவதாக செய்தி வந்துள்ளது. இதற்கு காரணம் கடும் நிதி நெருக்கடி என்று கூறப்படுகிறது.

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு அரசால் விதிக்கப்படும் அனைத்து வரிகளும், கட்டணங்களும் பன்மடங்கு உயர்த்தப்பட்டுவிட்டன. கடனும் அதிகமாக வாங்கப்பட்டு வருகிறது. 2023-2024ஆம் ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து தமிழ்நாடு அரசின் மொத்தக் கடன் ரூ.7 லட்சத்து 26 ஆயிரம் கோடி.

நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் துவரம் பருப்பு, பாமாயில் போன்றவற்றை நிறுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இருக்கின்ற சலுகைகளை பறிப்பது என்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, முதலமைச்சர் இதில் உடனடி கவனம் செலுத்தி, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்யவும், கூடுதலாக உளுத்தம் பருப்பு மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என்ற வாக்குறுதியினை நிறைவேற்றவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பொங்கல் விடுமுறை; சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details