தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“கனரக வாகன உரிமையாளர்களை திமுக அரசு அலைக்கழிக்கிறது” - ஓபிஎஸ் குற்றச்சாட்டு - heavy motor vehicle eligibility

OPS statement : கனரக வாகனங்களுக்கான சான்றிதழ்களைப் பெற லாரி உரிமையாளர்களை அலைக்கழிக்கும் நிகழ்வை தவிர்க்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

“கனரக வாகன உரிமையாளர்களை திமுக அரசு அலைக்கழிக்கிறது” - ஓபிஎஸ் குற்றச்சாட்டு
“கனரக வாகன உரிமையாளர்களை திமுக அரசு அலைக்கழிக்கிறது” - ஓபிஎஸ் குற்றச்சாட்டு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 1:57 PM IST

சென்னை: இது குறித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில் வளர்ச்சி அடைந்து நாட்டின் பொருளாதாரம் சிறந்து விளங்குவதிலும், அரசின் வருவாயைப் பெருக்குவதிலும் முக்கியப் பங்காற்றுபவர்கள் கனரக உரிமையாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதோடு, சரக்குப் போக்குவரத்துகளின் முதுகெலும்பாகத் திகழ்பவர்கள் லாரி உரிமையாளர்கள். இப்படிப்பட்ட கனரக உரிமையாளர்களின் பணி என்பது மிகவும் கடினமானது.

தங்களிடம் உள்ள வாகனங்களை பராமரிப்பது, உரிமங்களை புதுப்பிப்பது, வாகன வரி செலுத்துவது, சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது, ஓட்டுநர்கள், பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் போன்றோரை நியமிப்பது, அவர்களுக்கு சம்பளம் வழங்குவது, புதிய வாகனங்களை வாங்குவது, அவ்வப்போது ஏற்படும் இடையூறுகளை சரி செய்வது, தொழிலுக்கான பணத்திற்கு வழிவகுப்பது என பல பணிகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு, கனரக வாகனத் தொழில் புரிவோரிடம் இருக்கிறது.

பணத்தை இழந்து விட்டால் திரும்பப் பெறலாம். பொன்னை இழந்து விட்டால் திரும்பப் பெறலாம், மண்ணை இழந்துவிட்டால் திரும்பப் பெறலாம், ஆனால் நேரத்தை இழந்துவிட்டால் திரும்பப் பெற முடியாது என்பதை உணர்ந்து ஓய்வே இல்லாமல், காலத்தின் அருமை கருதி பணிகளை மேற்கொள்ளக்கூடிய நிலையில், கனரக வாகன உரிமையாளர்கள் இருக்கிறார்கள். இப்படி ஓய்வே இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கக் கூடிய கனரக வாகன உரிமையாளர்களை அலைக்கழிக்கும் பணியினை திமுக அரசு மேற்கொண்டிருப்பது வருத்தமளிக்கும் செயலாகும். இது கண்டனத்திற்குரியது.

கடந்த சில நாட்களாக புதிதாக பதிவு செய்யும் வாகனங்களுக்கான பதிவுச்சான்று மற்றும் கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்று ஆகியவற்றை பெற கனரக வாகன உரிமையாளர்களே வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களுக்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும், இந்தச் சான்றிதழ்களை இரண்டு நாட்களுக்குள் நேரில் பெற்றுச் செல்லவில்லையென்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் திமுக அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும், இதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாகவும் மாநில லாரி உரிமையாளர்கள் அமைப்பு தெரிவிக்கிறது.

ஓரிரு கனரக வாகனங்களை வைத்துக் கொண்டிருக்கும் உரிமையாளர்களில் பெரும்பாலானோர் ஓட்டுநராக இருப்பதால், அவர்களால் தங்கள் தொழிலை ஒரு நாளைக்கு நிறுத்திவிட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்ல இயலவில்லை என்றும், அதிக வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் கூடுதல் பணியால் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. சான்றிதழ்களைப் பெறுவதற்காக கனரக வாகன உரிமையாளர்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வரச் சொல்வது அவர்களின் வருவாயை கெடுப்பதற்குச் சமம்.

மேலும், கால விரயத்தை ஏற்படுத்தும். மாதக் கணக்கில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்கள், உதவி ஓட்டுநர்கள், கிளீனர்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டுமானால், அவர்களின் சிரமங்கள் குறைக்கப்பட வேண்டும். வாகன உரிமையாளர்களின் மோட்டார் வாகனச் சட்டம் 470-இன்படி, அங்கீகாரக் கடிதத்தின் (Authorization Letter) அடிப்படையில் பதிவுச் சான்று, தகுதிச் சான்று வழங்கும் பழைய நடைமுறை தொடர வேண்டும்.

புதிதாக பதிவுச் சான்றிதழ் பெறும் வாகனங்களுக்கு பி ரெஜிஸ்டர் (B Register) மூலம் அனுமதி வழங்கும் பழைய நடைமுறை பின்பற்றப்பட வேண்டுமென்றும் மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டு இருக்கின்ற இந்த காலக்கட்டத்தில், இணையதளம் மூலம் மக்கள் இணையில்லாச் சேவையை பெறும் இந்த காலக்கட்டத்தில், பதிவுச் சான்றிதழ், தகுதிச் சான்றிதழ் ஆகியவற்றை அலுவலகங்களுக்கு வந்து வாங்கிச் செல்ல வேண்டுமென்று உத்தரவிடுவது கற்காலத்திற்கு அழைத்துச் செல்லும் செயலாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, புதிதாக பதிவு செய்யும் வாகனங்களுக்கான பதிவுச் சான்று மற்றும் கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்று ஆகியவற்றை அங்கீகார கடிதத்தின் அடிப்படையில் வழங்கவும், புதிதாக பதிவுச் சான்றிதழ் பெறும் வாகனங்களுக்கு பி ரெஜிஸ்டர் மூலம் அந்த வாகனத்திற்கான அனுமதியை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:"தலைமைச் செயலகத்தை மாற்றும் முயற்சியை கைவிடுக" - ஓபிஎஸ் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details