சென்னை:தமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டு முதல் செவிலிய உதவியாளர்களுக்கு ஓர் ஆண்டு பயிற்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
மருத்துவ கல்வித்துறையால் வழங்கப்படும் இந்தப் பயிற்சி முடித்தவர்களூக்கு அரசு மருத்துவமனைகளில் பணியின்போது முன்னுரிமை வழங்கப்படும் எனக் கருதி செவிலியர் உதவியாளர் பயிற்சியில் ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சேர்ந்து பயிற்சி பெற்றனர்.
ஆனால், கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்த பின்னர் செவிலிய உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்தப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பி வந்தனர். இதனால், முறைப்படி பயிற்சி முடித்த செவிலிய உதவியாளர்கள் யாருக்கும் பணி கிடைக்கவில்லை.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத அவலம்
தற்போது, திமுக ஆட்சிக்கு வந்துள்ளநிலையில், முதலமைச்சரையோ அல்லது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரையோ நேரில் சந்தித்து மனு அளிக்கலாம் என செவிலிய உதவியாளர் பயிற்சி முடித்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து சென்னைக்கு வந்தனர்.
அவர்களை தேனாம்பேட்டை அறிவாலயம் செல்வதற்கு முன்பாக காவல் துறையினர் தேடிப் பிடித்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.
காத்திருப்புப் போராட்டத்தில் செவிலிய உதவியாளர்
இதனை அறிந்த செவிலிய உதவியாளர்கள் கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.