தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 16ஆம் தேதி போராட்டம்'

செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மருத்துவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவிந்தரநாத் தெரிவித்துள்ளார்.

டாக்டர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவிந்தரநாத் தெ
டாக்டர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவிந்தரநாத் தெ

By

Published : Aug 6, 2021, 4:26 PM IST

சென்னை: செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவிந்தரநாத், ”தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ள 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் வரவேற்புக்குரியது. இந்தத் திட்டத்தின் மூலம் சர்க்கரை நோய், மிகை ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களை கட்டுப்படுத்த முடியும்.

இத்தகைய நோய் உடையவர்களின் வீடுகளுக்கு சென்று மருந்துகளை வழங்குவது உடல்நல பாதிப்பு, முதுமையின் காரணமாக மருத்துவமனைக்கு வர இயலாத நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2015ஆம் ஆண்டில் மருத்துவத் தேர்வாணையம் மூலம் ஏழாயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்பட்டு ஏழு ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் இன்னும் மூன்றாயிரத்து 500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இவர்கள் மாதம் 14 ஆயிரம் ரூபாய் சம்பளம் மட்டுமே தொகுப்பூதியத்தில் பெற்று வருகின்றனர். இவர்களின் உழைப்பு சுரண்டலை அரசு கைவிட வேண்டும்.

2019ஆம் ஆண்டில் மூலம் தேர்வு நடத்தப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட இரண்டாயிரம் பேரையும், கரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட இரண்டாயிரம் செவிலியர்களும் நிரந்தரம் செய்யப்பட வேண்டும். மேலும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு விடுமுறை போன்ற இதர சலுகைகளையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

ஒப்பந்த செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதிலும் அதற்கான ஊதியம் வழங்குவதிலும் கூட பிரச்சினைகள் நீடித்து வருகிறது. பல மருத்துவமனைகளில் மகப்பேறு விடுப்புகூட வழங்கப்படவில்லை. கரோனா காலத்தில் தற்காலிகமாக பணி நியமனம் செய்த செவிலியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது.

கரோனா பணிக்காக செவிலியர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 20 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை முதலமைச்சர் அறிவித்தார். அந்தத் தொகை வழங்குவதற்கு தொடர்ந்து பணி செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. அந்த பிரச்சினையை நீக்கி செவிலியர்களுக்கு உடனடியாக ஊக்கத்தொகை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு கரோனா தொற்று தீவிரமாகப் பரவியபோது செவிலியர்களுக்கு முகக்கவசம், பாதுகாப்பு கவசம், கையுறைகள் போன்றவை முறையாக வழங்கப்படவில்லை. இவற்றை முறையாக வழங்கிட வேண்டுமென தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் செவிலியர்கள் போராட்டங்களை நடத்தினர்.

செய்தியாளர்களை சந்தித்த சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவிந்தரநாத்

அதேபோன்று திண்டிவனம் மருத்துவமனையிலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தற்போது மருத்துவ அலுவலர்கள் முயன்று உள்ளனர்.

இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஐஐடி இடஒதுக்கீடு: ராம்கோபால் ராவ் குழு அறிக்கையை நிராகரிக்குமாறு சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details