சென்னை: மருத்துவ தேர்வாணையம் மூலம் கடந்த 2020ஆம் ஆண்டு, கரோனா பெருந்தொற்று காலத்தில் 3,200 செவிலியர்கள் தற்காலிகமாகப் பணி அமர்த்தப்பட்டனர். அவர்களில், 2,400 செவிலியர்கள் நிரந்தர ஒப்பந்த செவிலியராக பணியமர்த்தப்படுவர் எனவும்; மீதமுள்ள 800 செவிலியர்கள் எதிர்காலத்தில் காலிப்பணியிடங்களுக்கு ஏற்றவாறு பணியமர்த்தபடுவார்கள் என கடந்த மார்ச் 8ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அரசு உறுதி அளித்ததற்கு மாறாக, நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி 800 செவிலியர்களை பணியில் இருந்து கடந்த மார்ச் 31ஆம் தேதி பணி நீக்கம் செய்துள்ளனர். இதனால் கரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செவிலியர்களின் போராட்டம்:அப்போது, “கரோனா பேரிடர் காலத்தில் நேரம், காலம் பார்க்காமல் நாங்கள் எங்களின் வேலையை செய்தோம். இருந்தும் எங்களின் கோரிக்கைகளை ஏற்று எங்களின் பணியை நிரந்தரம் செய்வது குறித்து எந்தவித அறிவிப்பும் இதுவரை வரவில்லை. தொடர்ந்து நாங்கள் பலவித போராட்டங்களில் ஈடுபடும் எங்களின் கோரிக்கைகளை சற்றும் செவிசாய்க்காத தமிழ்நாடு அரசு, இனியாவது எங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமா” என செவிலியர்கள் கேள்வி எழுப்பினர்.