நிவா் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இயக்கப்படும் உள்நாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருந்தது. இதனால் பயணிகள் எண்ணிக்கையும் மிகவும் குறைவானது. நேற்று (நவ.26) அதிகாலை நிவர் புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து, நேற்று காலை 9 மணியளவில் சென்னையில் விமான சேவை மீண்டும் தொடங்கியது.
கரையைக் கடந்த நிவர்: உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு - கரையைக் கடந்த நிவர்
சென்னை: நிவர் புயல் கரையை கடந்ததால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.
‘நேற்றைவிட இன்று பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து இன்று வெளிமாநிலங்கள், மாவட்டங்களுக்கு 102 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதில் சுமாா் 11 ஆயிரத்து 700 போ் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனா்.
அதேபோல் வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து 102 விமானங்கள் சென்னை வருகின்றன. அதில் பயணிக்க 9,350 போ் முன்பதிவு செய்துள்ளனா். இன்று (நவ.27) ஒரே நாளில் 204 விமானங்களில் 21 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் பயணிக்கவிருக்கின்றனா். இன்றைய நாள் நிறைவடையும்போது அந்த எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகையின்போது இருந்த பயணிகள் கூட்டத்தைவிட இன்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளும், விமானங்களும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.