தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘கருத்துச் சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல்’ - வைகோவுக்காக கொதித்த சீமான்!

சென்னை: தேச துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது கருத்துச் சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் என சீமான் கொதித்துள்ளார்.

seeman

By

Published : Jul 5, 2019, 5:55 PM IST

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக அப்போதைய திமுக அரசு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தேச துரோக வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், வைகோ மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய சிறப்பு நீதிமன்றம், அவருக்கு ஒராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தது.

இந்நிலையில், வைகோ குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது கருத்துச் சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கின்ற கருத்துரிமையின் மீதான தாக்குதலாகவே தான் கருதுவதாகவும், அழித்தொழிக்கப்பட்ட ஒரு இனத்தின் வலியைத் தாங்கி நீதிகேட்பது தேச துரோக குற்றமாகத் தெரிவது நம் நாட்டின் நீதி பரிபாலன முறைகளில் பாரபட்சத் தன்மை இருப்பதை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவதாகவும் சாடியுள்ளார்.

மேலும், இந்த தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டில் நீதி கிடைக்க, வைகோவின் கருத்துரிமை சார்ந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி உடனிருக்கும் என்றும் சீமான் உறுதியளித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details