சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் 2011ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளார்.
நடிகை விஜயலட்சுமி தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார். தொடர்ந்து சீமானுடன் உடன்பாடு ஏற்பட்டதாக கூறி அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறி காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்தார்.
இந்நிலையில், அண்மையில் இந்த மனுவை மீண்டும் விசாரிக்கக் கோரி நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விஜயலட்சுமியிடம் தனியாக விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் அளித்தார். நடிகை விஜயலட்சுமிக்கு சில பரிசோதனைகள் மேற்கொண்டு அதன் முடிவுகள் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், வழக்கை வாபஸ் பெற்ற விஜயலட்சுமி, பெங்களூரு சென்றார். இருப்பினும், இந்த வழக்கு விசாரணைக்கு சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகினார். இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்து இருந்தார்.
திமுக அரசுக்கு எதிராகவும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் கருத்துக்களை கூறி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், 2011ல் முடிக்கப்பட்ட வழக்கை, 12 ஆண்டுகளுக்கு பின், அரசியல் உள்நோக்கத்துடன் மீண்டும் விசாரிப்பதால், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளார்.