சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பால் தட்டுப்பாடு நிலவுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு உள்ளது என்றும் ஆவின் பால் கொள்முதல் விலையை குறைக்க வேண்டும் என்றும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் உள்பட பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தோல் கழலை நோய் காரணமாக வட மாநிலங்களில் கறவை மாடுகள் பாதிக்கப்பட்டு இறந்துள்ளன. இதன் காரணமாக நாடு முழுவதும் பால் உற்பத்தி குறைந்துள்ளது. ஆவின் நிறுவனத்தில் மட்டும் பால் கொள்முதல் குறைந்து விட்டதாக கூறுவது பொய்யான செய்தி ஆகும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர், ”கூட்டுறவு சங்கங்களின் பால் உற்பத்திக்கு உரிய விதிகளை மீறி அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த 2 ஆயிரம் சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட சங்கங்கள் பால் விற்பனை செய்தது பற்றி உரிய விளக்கம் அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சங்கங்கள் கலைக்கப்படும். மேலும், வடமாநிலங்களில் தோல் கழலை நோயினால் பல கறவை மாடுகள் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக தமிழ்நாட்டில் இந்நோய் பரவுவது தடுக்கப்பட்டது.