சென்னை:அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 8ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக கலந்தாய்வு நடத்துவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தொடக்க மற்றும் பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மீண்டும் மே 15ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தொடக்கக் கல்வியில் பணி ஆற்றும் ஆசிரியர்களுக்கு மலைப்பகுதி சுழற்சி கலந்தாய்வு 15ஆம் தேதியும், அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் 15ஆம் தேதியும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு 16ஆம் தேதியும், அரசு நகராட்சி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வு 16ஆம் தேதியும் நடத்தப்படவுள்ளது. கடந்த ஆண்டு பணி நிரவல் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மீண்டும் தாங்கள் பணியாற்றிய கல்வி ஒன்றியத்திற்கு மாற்றுவதற்கான கலந்தாய்வு 17ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், மீண்டும் தாங்கள் பணியாற்றிய கல்வி ஒன்றியத்திற்கு மாற்றுவதற்கான கலந்தாய்வு வரும் 18ஆம் தேதியும் நடைபெற உள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள் வரும் 20ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள் வரும் 22ஆம் தேதியும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 26ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.