சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் பலர் ஹெல்மெட் அணிவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில், கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரி சென்னைச் சேர்ந்த கே.கே. ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக காவல் துறை சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி ஐ.ஜி. சாம்சன் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 2019 ஜனவரி முதல் அக்டோபர் வரை சென்னை தவிர பிற மாவட்டங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 47 லட்சத்து 87 ஆயிரத்து 812 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன. ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்துக்குள்ளாகி 3,535 பேர் பலியாகியுள்ளனர். ஹெல்மெட் அணிந்தும் விபத்தில் சிக்கியவர்களில் 347 பேர் பலியாகியுள்ளனர் என குறிப்பிட்டிருந்தது. மேலும், தமிழ்நாடு முழுவதும் ஆட்டோக்களில் பக்கவாட்டு கண்ணாடி வைக்காதவர்கள் மீது 3,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.