சென்னை:அம்பத்தூர் அடுத்துள்ள பட்டரவாக்கம் தொழிற்சாலையில், மது போதையில் 200க்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதை தடுக்க முயன்ற போலீசாரையும் தொழிலாளர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பத்தூர் அடுத்த பட்டரவாக்கம் சாலையில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இங்கு நேற்று இரவு ஆயுத பூஜை விழா நடைபெற்றது. அப்போது 200க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
பின்னர், இது பற்றி அறிந்ததும் அப்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் ரகுபதி மற்றும் காவலர் ராஜ்குமார் நேரில் சென்று, இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அவர்களை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், காவலரை சரமாரியாக தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. மேலும் போலீசார் வந்த இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.