தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’நேரடியாக தொலைதூரக் கல்வியில் பட்ட மேற்படிப்பு பயின்றவர்களுக்கு  பதவி உயர்வி இல்லை’ - தொலைதூரக் கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வி பெற முடியாது

சென்னை: இளங்கலை பட்டப்படிப்பு படிக்காமல் தொலைதூரக் கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள், அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jul 31, 2021, 12:44 PM IST

தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறையில் இரண்டாம் நிலை சார் பதிவாளராக தேர்வான வேலூர் மாவட்டம், சோழிங்கரையைச் சேர்ந்த செந்தில்குமார், துறைரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளதால் முதல் நிலை சார் பதிவாளராக பதவி உயர்வு வழங்கக் கோரி அரசுக்கு விண்ணப்பித்தார்.

ஆனால், கல்லூரிக்கு சென்று இளங்கலை பட்டப்படிப்பை படிக்காமல், தொலைதூரக் கல்வி மூலம் பட்ட மேற்படிப்பை அவர் முடித்துள்ளதால், பதவி உயர்வு பட்டியலில் இடம்பெறத் தகுதியில்லை என வணிகவரித் துறை அவரது கோரிக்கையை நிராகரித்தது.

இதனை எதிர்த்து செந்தில் குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசு நிர்ணயித்துள்ள தகுதி என்பது பணி நியமனத்திற்கானது தானே தவிர பதவி உயர்வுக்கு அல்ல எனக் கூறி அந்த உத்தரவை ரத்து செய்ததுடன், பதவி உயர்வு பட்டியலில் செந்தில் குமார் பெயரை சேர்க்கவும் உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவுத் துறை தலைவரும், வணிகவரித் துறை செயலாளரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை தலைவர், வணிகவரித்துறை செயலாளர் ஆகியோரின் தரப்பில் அரசு வழக்கறிஞர் இரா.நீலகண்டனும், சார் பதிவாளர் செந்தில் குமார் தரப்பில் எம்.ராமமூர்த்தியும் ஆஜரானார்கள்.

தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், திறந்த நிலை பல்கலைக்கழகம் அல்லது தொலைதூரக் கல்வி மூலம் பட்டப்படிப்பு முடிக்காமல், பட்ட மேற்படிப்பு படித்தவர்களை பணி நியமனத்துக்கோ, பதவி உயர்வுக்கோ பரிசீலிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி, பதவி உயர்வு பட்டியலில் செந்தில் குமாரை சேர்க்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

இதையும் படிங்க:2024 தேர்தலைக் குறிவைத்து மாற்றம்...பிரசாந்த் கிஷோர் கைகளுக்குள் காங்கிரஸ்!

ABOUT THE AUTHOR

...view details