ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. அப்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ஆனால் அரசின் எச்சரிக்கையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறித்த விபரத்தினை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் நீலநிறத்தில் குறித்து காண்பிக்கப்பட்டது. அந்த ஒழுங்கு நடவடிக்கை தற்போது வரை நிலுவையில் உள்ளது.
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் மாதம் நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. அதற்கான அரசாணையில் ஏற்கனவே பணியிடமாறுதல் பெற்ற ஆசிரியர் குறைந்தது மூன்று ஆண்டுகள் அந்தப் பள்ளியில் பணி புரிந்தால் மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து ஆசிரியர்கள் சிலர் நீதிமன்றம் சென்றனர். அந்த வழக்கின் மீதான தீர்ப்பு சமீபத்தில் வெளியானதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டும் ஓராண்டு என நிபந்தனையில் தளர்வு செய்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் விரைவில் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர் பணியில் இருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்கள் பட்டியலை தயார் செய்துள்ளது. இந்தப் பட்டியலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சரிபார்த்து அனுப்ப வேண்டும் என்றும், தகுதி இல்லாத நபர்களின் பெயர்களை பட்டியலை விட்டு நீக்கம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
- ஆசிரியர்கள் மீது தண்டனை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் ஏதும் நிலுவையில் இருக்கக்கூடாது.
- அலகு விட்டு அலகு மாறுதல் இந்த துறைகளிலிருந்து வந்து இருப்பின் பள்ளிக்கல்வித் துறையில் பணியில் சேர்ந்த நாளின் அடிப்படையில் அவர்களின் பெயர் இப்பட்டியலில் சேர்க்கப்படவேண்டும்.
- இரட்டைப் பட்டம் மற்றும் ஒரே ஆண்டில் இரண்டு பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகள் படித்து இருக்கக் கூடாது.
- அரசு நடைமுறையில் உள்ள விதிகளின்படி பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்னர் திறந்தவெளி பல்கலைக்கழகம் வழியாக பெறும் பட்டம் அரசு நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு செல்லும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
- இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் எந்த பாடத்திற்கு தகுதியானவரோ அந்த பாடத்தினை முதுகலையில் முதன்மைப் பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதர பாடங்களை முதன்மையாகக் கொண்டு பட்டம் பெற்றவர்கள் முதுகலையில் அப்படத்திற்கு இணையானது என அரசாணையில் அந்த பாடம் இடம் பெற்றிருந்தால் மட்டுமே முதுகலை பதவி உயர்வு பட்டியலில் அவரின் பெயரை சேர்க்க வேண்டும்.
- ஏற்கனவே முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம்பெற்றிருந்து அவர் அப்பொழுது வேண்டாம் எனக் கூறியிருந்தால் மூன்றாண்டுகள் முடிவுற்ற பின்னர் தான் மீண்டும் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
- இந்தப் பட்டியலினை சரி பார்த்து 24-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதில் யாரேனும் விடுபட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட பிரிவு உதவியாளர், கண்காணிப்பாளர், நேர்முக உதவியாளர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்.
மொத்தமாக கணக்கு பாடத்தில் 550 பட்டதாரி ஆசிரியர்கள், இயற்பியல் பாடத்தில் 380 பட்டதாரி ஆசிரியர்கள், வேதியியல் பாடத்தில் 370, தாவரவியல் பாடத்தில் 270 ,விலங்கியல் பாடத்தில் 200 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பள்ளிக் கல்வித்துறையால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் இருந்தால் நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு தற்போது அதில் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என்பது தெளிவாகியுள்ளது.