சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் தினசரி பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. அதிலும், கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி தமிழ்நாட்டின் மொத்த கரோனா வைரஸ் பாதிப்பு 22 என்ற எண்ணிக்கையில் இருந்தது.
ஆனால், நேற்று ஒரே நாளில் 476 ஆக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பின்பு மீண்டும் கரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு கரோனா வைரஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் கரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் குறிப்பாக முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.500 வரை அபராதம் விதிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் விமான நிலையத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் "நோ மாஸ்க் நோ எண்ட்ரி" என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே விமான நிலையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் அனைவரும் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மாஸ்க் அணியாமல் வருகிறவா்களை நிறுத்தி, கரோனா வைரஸ் விதிகளை சுட்டிக்காட்டி வழிகாட்டியும் வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் கரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் அதேநேரம் முக கவசத்தை முறையாக அணியாமல், கழுத்தில் தொங்க விட்டு இருப்பவர்களையும், முக கவசத்தை சரியாக அணியும்படி அறிவுறுத்துகின்றனா். விமான பயணிகள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றுகளோடு தான் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மேலைநாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் பரவல் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஏற்கனவே சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது கரோனா வைரஸ் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சந்தேகப்படும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டு ஆகியவைகளை சுகாதாரத்துறையினா் பாா்த்து முகவரி மற்றும் மொபைல் எண்கள் போன்ற தகவலை பெற்ற பின்னரே, பயணிகளை வெளியேச் செல்ல அனுமதிக்கின்றனர்.
ஏனென்றால், கரோனா தொற்றின் முதல் அலையின் போது பயணிகளுக்கு ஒரு படிவம் வழங்கப்பட்டது. அதில், பயணிகளே முகவரி மற்றும் மொபைல் எண்களை தங்களது கையெழுத்தோடு எழுதி கொடுக்க வேண்டும் என்ற விதி முறையை அமலில் இருந்தது. ஆனால், அடுத்தக்கட்ட பரிசோதனையின் முடிவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களை தேடிக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி மருத்துவமனையில் சேர்ப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
அதில் சுமார் 15,000 பயணிகள் கொடுத்த முகவரி மற்றும் மொபைல் எண்கள் தவறானவை என தெரிய வந்தது. எனவே இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க தற்போது பாஸ்போா்ட், ஆதாா் அட்டைகளை அங்குள்ள அலுவலர்களே ஆய்வு செய்து தகவல்களை பெறுகின்றனர்.
இதையும் படிங்க:இந்தியாவில் அதிகரிக்கும் கரோனா தொற்று - ஒரே நாளில் 10 ஆயிரத்தைத் தாண்டியது