சென்னை: நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒன்பது பேர் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்ற அதிமுக, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள்;
1. விராலிமலை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சி.விஜயபாஸ்கர்
2. கோவில்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜு
3. ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியலிங்கம்
4. அம்பாசமுத்திரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இசக்கி சுப்பையா
5. குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் சிவசங்கர்
6. ராசிபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மதிவேந்தன்
7. வேடசந்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் காந்திராஜன்
8. செங்கல்பட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வரலட்சுமி
9. அந்தியூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடாசலம்
பதிவி ஏற்பின் போது சட்டப்பேரவை உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில், "நான்காவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், தொடர்ந்து மூன்றாவது முறையாக விராலிமலை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி. என் வெற்றிக்காக உழைத்த அஇஅதிமுக தொண்டர்களுக்கும் நன்றி. ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி உறுப்பினராகவும், தொகுதியின் பிரச்னைகளை சட்டப்பேரவையில் ஓங்கி ஒலிக்க செய்வேன்" எனக் கூறினார்.
சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜூ கூறுகையில், "மூன்றாவது முறையாக என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி. தேர்தலின் போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதேநேரத்தில், சிறப்பான எதிர்க்கட்சியாக சட்டப்பேரவையில் அதிமுகவின் செயல்பாடு இருக்கும்" எனத் தெரிவித்தார்.
மேற்கண்ட ஒன்பது சட்டப்பேரவை உறுப்பினர்களும், கரோனா தொற்று மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மே 11ஆம் தேதி பதவி ஏற்காத நிலையில், இன்று (மே.24) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில், சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். இந்நிகழ்வின் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனிருந்தார்.
இதையும் படிங்க: முன்பதிவு மையங்கள் குறைப்பு - தெற்கு ரயில்வே!