சென்னை:கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற குக்கர் வெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். அதே போல கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து சிதறியது. இதில் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தமன் மற்றும் குண்டை கொண்டு வந்த பயங்கரவாதி ஷாரிக் என்பவர் படுகாயமடைந்தனர்.
அடுத்தடுத்து நடந்த இரு குண்டு வெடிப்பு சம்பவங்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இரு வழக்கையும் என்.ஐ.ஏ விசாரணை செய்து வருகிறது. இரு சம்பவங்களும் தற்கொலை படைத்தாக்குதல் நடத்த திட்டமிட்டு தவறுதலாக குண்டு வெடித்தது தெரியவந்தது. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பில் பயங்கரவாதி ஷாரிக் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
குக்கர் வெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதி ஷாரிக், தமிழகத்தில் பல பகுதிகளில் தங்கி சதித் திட்டம் தீட்டியிருப்பது என்ஐஏ அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்ததால், இரு வெடிப்பு சம்பவங்களும் ஒரே கும்பல் நிகழ்த்தியுள்ளதா என்ற கோணங்களில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.