சென்னை:கேரளாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மத வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் மதத் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த தகவலின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், கேரளா தீவிரவாதத் தடுப்பு அதிகாரிகளுடன் இணைந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர், தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலம் பகுதியில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த தகவலின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தீவிர சோதனைக்குப் பின் நேற்று (ஜூலை 19) ஆசிப் என்பவரை, சத்தியமங்கலம் பகுதியில் கைது செய்துள்ளனர். அவர் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து ஆசிப் வீடு, திருச்சூரை சேர்ந்த சையது, நபீல் அகமது மற்றும் பாலக்காட்டைச் சேர்ந்த ரயீஸ் ஆகிய நான்கு பேருக்குச் சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டது.
இதையும் படிங்க:ரூ.15 போதும்; 3 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 60 கி.மீ. பயணம்.. தூத்துக்குடி இளைஞர் கண்டுபிடித்த சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜர்!
சோதனையில் டிஜிட்டல் முக்கிய ஆவணங்கள் மற்றும் குற்றத்திற்கு தொடர்புடைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை ஊக்குவிக்க பண உதவி செய்து வந்ததும் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இவர்கள் பல்வேறு முக்கிய இடங்களில் கூட்டம் நடத்தி வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மதத் தலைவர்களின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும், கேரளாவில் தீவிரவாத மற்றும் மத பிளவை ஏற்படுத்த திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் மீது உபா சட்டத்தின் கீழ் கொச்சின் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தது போல தீவிரவாதத்தை வேரோடு அழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன எனவும்; அதற்கான நடவடிக்கை எடுத்து ஒரு பெரிய தாக்குதலை தடுத்து நிறுத்தி இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க:அரசியல் போராட்டத்தில் நீதித்துறையை ஏன் இழுக்கிறீர்கள்? சென்னை உயர் நீதிமன்றம் அப்செட்