தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

PFI-க்கு எதிராக தமிழ்நாடு, கேரளாவில் NIA குற்றப்பத்திரிகை.. திடுக்கிடும் தகவல்கள் வெளியீடு! - NIA குற்றப்பத்திரிகையை தாக்கல்

2027ஆம் ஆண்டுக்குள் இஸ்லாமிய விதிகளை இந்தியாவில் அமல்படுத்தும் தீவிரவாத எண்ணத்தில் PFI செயல்பட்டது தெரியவந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இந்த அமைப்புக்கு எதிராக NIA நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 18, 2023, 7:56 AM IST

சென்னை:தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு எதிராக என்.ஐ.ஏ இரண்டு குற்றப்பத்திரிகைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. 2047ஆம் ஆண்டுக்குள் இஸ்லாமிய விதிகளை இந்தியாவில் அமல்படுத்தத் தீவிரவாத எண்ணத்தில் செயல்பட்டது தெரியவந்துள்ளது. ஒரே மாதத்தில் பி.எப்.ஐ அமைப்பின் மீது நான்கு குற்றப்பத்திரிகைகளை என்.ஐ.ஏ தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு (Popular Friend of India - PFI) பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அதன் நிர்வாகிகள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு (NIA) அதிகாரிகள் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். அதனடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உட்பட சில அமைப்புகள் மத்திய அரசால் தடை (PFI banned in india) செய்யப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் மீது பல்வேறு மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரால் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் தொடர்புடைய நான்கு வழக்குகள் மீது தேசிய புலனாய்வு முகமை அமைப்பு குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. கடந்த 13 ஆம் தேதி ஜெய்ப்பூர் மாநிலத்திலும், 16ஆம் தேதி ஹைதராபாத் மாநிலத்திலும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் என 68 பேர் மீது நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ நேற்று (மார்ச்.17) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இஸ்லாமிய விதிகளைக் கொண்டுவரத் திட்டம்:அதில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தீவிரமாக மத பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், இரு பிரிவினருடைய மோதலை ஏற்படுத்தும் விதமாகச் செயல்பட்டு வந்ததாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் 2047ஆம் ஆண்டுக்குள் இஸ்லாமிய விதிகளை அமல்படுத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தீவிரமாகச் செயல்பட்டு வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து அவர்களுக்கு ஆயுதங்கள் கையாள்வது தொடர்பாகவும், நிதி வசூலில் ஈடுபடவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் கூட்டங்கள் நடத்தி பயிற்சி அளித்திருப்பதும் தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி:குறிப்பாக, கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் ஸ்ரீனிவாசன் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்குத் தொடர்புடையதும் கேரளா தேசிய புலனாய்வு முகமை அமைப்பு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு சொந்தமான 17 நிலங்கள் மற்றும் 18 வங்கிக் கணக்குகளை முடக்கி இருப்பதாகக் கேரள தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது.

இது மட்டுமின்றி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் இந்தியா முழுவதும் மக்களோடு மக்களாக இணைந்து ஜிஹாத் என்னும் மத பிரச்சாரத்தைப் பரப்பியதாகவும், மேலும், பல விங்க் மற்றும் பிரிவுகளை ஆரம்பித்து இஸ்லாமிய பிரச்சாரத்தைப் பரப்பி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இஸ்லாமிய பிரச்சாரத்திற்கு எதிராக செயல்படும் நபர்களை கொலை செய்ய உத்தரவிட அவர்களுக்காக பிரத்யேக "dar ul qaza" எனும் நீதிமன்றத்தை இயக்கி வந்ததும் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 10 நபர்கள் மீது சென்னை என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் சதார், மாநில நிர்வாக உறுப்பினர் யாஹியா கோயா தங்கல், எர்ணாகுளம் மண்டல செயலாளர் சியாஸ் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்களின் பெயர்களைக் கேரளா என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையில் இணைத்துள்ளனர். அதேபோல, தமிழ்நாட்டில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில துணைத் தலைவர் காலித் முகமது உட்பட 10 நபர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வேங்கைவயல் குடிநீர்த்தொட்டி வழக்கில் எந்த விசாரணை அமைப்பும் நடவடிக்கை எடுக்காது - வேதனைத் தெரிவித்த நீதிபதிகள்

ABOUT THE AUTHOR

...view details