சென்னை:விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப்பொருள் மற்றும் ஆயுதம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அதிகாரிகள் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 13 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை புத்துயிர் பெறச் செய்ய முயற்சித்த இலங்கை நாட்டைச் சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக போதைப்பொருள் மற்றும் ஆயுதம் கடத்த 10 இலங்கை நாட்டவர்கள் உட்பட 13 பேர் உதவியது அம்பலம் ஆகியுள்ளது. மேலும், இவர்களிடம் இருந்து ரொக்கம் மற்றும் தங்க கட்டிகளாக ஹவாலா முறையில் சென்னை மற்றும் இலங்கை இடையே பரிமாற்றம் நடந்துள்ளதும், கிரிப்டோ கரன்சி மூலமாகவும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுத கடத்தலுக்கு பரிவர்த்தனை நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள்கள் மற்றும் ஆயுதக் கடத்தல் விவகாரம்:கேரள மாநிலம், விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்த ஆண்டு சிறிய வகை படகு மூலம் கடத்திவரப்பட்ட 327 கிலோ ஹெராய்ன், 5 ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரம் தோட்டாக்கள் ஆகியவை ரோந்துப் பணியில் இருந்த கடலோர பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலீம் என்பவர் தலைமையில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் விழிஞ்சம் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி விழிஞ்சம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், ஆயுதக் கடத்தல் விவகாரம் என்பதால் இந்த வழக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு அதிகாரிகள் விசாரணையைத் துவங்கினர்.
சென்னை பகுதியில் NIA விசாரணை:சென்னை, திருவள்ளூர் உட்பட தமிழகத்தின் பல இடங்களில் சோதனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சர்குணம் (எ) சபேசனான இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டார். அவர் இருந்த இடத்திலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கம் (Liberation Tigers of Tamil Eelam - LTTE) தொடர்பான பல்வேறு ஆவணங்கள், சிம் கார்டுகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
தீவிரவாத கும்பலுடன் தொடர்பு: மேலும் இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த நிலையில், மீண்டும் கடந்த ஜூலை மாதம் தமிழகத்தில் டெல்லி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னையில், சேலையூர் கேம்ப் குரோம்பேட்டை, பல்லாவரம், வளசரவாக்கம், மண்ணடி, ஈ.சி.ஆர் உட்பட 9 இடங்கள் மற்றும் திருச்சியில் 11 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பாகிஸ்தானில் இருந்து ஈரான் துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடற்பகுதியில் போதைப்பொருட்களை கொண்டு வந்து, இலங்கை படகில் கடத்தப்பட்டதால் தீவிரவாத கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.