சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிரணி நடத்தும் 'மகளிர் உரிமை மாநாடு' சென்னை நந்தனத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பேசிய இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா, "மகளிர் உரிமை மாநாட்டில், மக்களுக்கான நலத்திடங்களை உருவாக்கி செயல்படுத்துவதில் சிறப்பான வெற்றிக் கண்டவர் கருணாநிதி. கருணாநிதியின் நூற்றாண்டு விழா மட்டுமல்ல அவரது வாழ்க்கையே கொண்டாப்பட வேண்டிய விழா தான்.
இந்தியாவில், மதச்சார்பற்ற நாட்டில் இப்பொது எங்கும் கேட்பது, 'ஜெய் ஸ்ரீராம்' என்ற குரல்தான். இந்த நாட்டை ஒழிக்கவே நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். மணிப்பூரில் நடக்கும் கொலை, பாலியல் வன்கொடுமைகள் எதுவுமே பிரதமர் மோடிக்கு கவலையை ஏற்படுத்தவில்லை. எங்கு கண்டாலும், பெண்கள் பாலியல் கொடுமை நடைபெறும் நிலைமைதான் இப்போது இருக்கிறது.
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை:ஆனால், இத்தகைய இக்கட்டான சூழலில்தான், இந்த மகளிர் உரிமை மாநாட்டை நடத்திக் கொண்டு இருக்கிறோம். பள்ளியில், இஸ்லாமிய சிறுவனைத் தாக்க சக மாணவர்களை தூண்டிவிடும் சம்பவங்கள், பாலியல் வன்கொடுமைகள் முன்பு இருந்தாலும் தற்போது எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன. ஆனால், நீதிமன்றத்தில் சரியான நீதி கிடைப்பதில்லை. பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் மோடி அரசு விடுதலை செய்தது.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு; பாஜகவின் தேர்தல் நாடகம்:நாடாளுமன்றத் தேர்தலை நினைவில் வைத்துதான் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டு சட்டத்தை மத்தி அரசு இயற்றி உள்ளது. பேப்பரில் சர்க்கரை என்று எழுதி அருகில் தீயை வைத்து டீ குடித்தால் இனிக்குமா? அதேபோல் தான், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மகளிர் இட ஒதுக்கீடும்.
பெண்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்து இருக்கும் மோடி அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இம்மாநாடு நடைபெறுகிறது. மோடி அரசாங்கத்தை முடிவுக் கொண்டு வரவேண்டும். பெண்களின் உரிமைகளை காப்பாற்ற, மதச்சார்பின்மையை நாம் காப்பாற்ற வேண்டும். அதற்கு மோடி அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
பெண்களுக்கு அரசியலில் முன்னுரிமை:திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் பேசுகையில், "சமூக நீதி, சமத்துவத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. நலத்திடங்களை சிறப்பாக செயல்படுத்துவதில், தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 75 ஆண்டுகால தேர்தல் அரசியலில் பெண்களின் பங்கு மிகவும் குறைந்துள்ளது. பெண்களை புறக்கணிக்கும் செயல்பாடுகளை ஒவ்வொறு அரசியல் கட்சியும் கைவிட முன்வர வேண்டும்.
மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த அநீதி: ஒவ்வொறு அரசியல் கட்சியும் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அப்போது தான், மாற்றம் சத்தியமாகும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மகளிர் இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஏனெனில், பாஜகவுக்கு அதில் அக்கறையில்லை. பெண்களின் மேல் பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை. தொடர்ந்து மணிப்பூரில் பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கருணாநிதி, ராஜீவ் காந்தி ஆகியோரைப் போன்ற ஒவ்வொரு தலைவரும் நமது நாட்டிற்கு தேவை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:"எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் போ என்றால்.. சட்டமன்றம்.. பாராளுமன்றம் எதற்கு?" - சீமான் ஆவேசம்!