நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இந்த சூழலில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததில் சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் அனுமதி வேண்டி காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. அதிமுக அமைச்சர்கள் இதற்கு ஒப்புதல் பெற ராஜ் பவன் சென்று ஆளுநரை சந்தித்தனர். ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளது. ஆளுநர் முடிவு தெரியும்வரை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்காது என அதிமுக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், இது தொடர்பாக ஆளுநருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக 7.5% உள் ஒதுக்கீடை வழங்கினால்தான் அவர்கள் இந்த கல்வியாண்டிலேயே இதனால் பயன்பெற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் உள் ஒதுக்கீடு விஷயத்தில் ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதிப்பது அம்பலமாகியுள்ளது. இரு கட்சிகளுக்கும் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு இல்லாத போதிலும், ஆளுநர் ஒப்புதல் அளிப்பதை இழுத்தடித்து வருகிறார். மத்திய அரசின் பிரதிநிதியாக இருப்பவர் ஆளுநர். இதன் விளைவு சட்டப்பேரவை தேர்தலில் தெரியும். திமுக நேர்த்தியாக செயல்பட்டு வருகிறது என்கிறார் அரசறிவியல் துறை தலைவர், பேராசிரியர் ராமு மணிவண்ணன்.