தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புத்தாண்டு ராசிபலன் 2024; உங்களுக்கு எப்படி அமையப் போகிறது? - புத்தாண்டு 2024

2024 New year Rasi Palan: நாளை புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்கள் 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் எப்படி இருக்கப்போகிறது எனக் காணலாம்.

2024 New year Rasi Palan
புத்தாண்டு ராசிபலன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 8:46 PM IST

மேஷம்: மேஷம் ராசிக்காரர்களே, இந்த ஆண்டு மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில், வியாழன் உங்கள் ராசியிலும், சனிபகவான் பதினொன்றாம் வீட்டிலும் இருக்கிறார்கள். எனவே, உங்கள் வருமானம் நன்றாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் சரியான தேர்வுகளை மேற்கொள்வது உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

நாளுக்கு நாள் வருமானமும் அதிகரிக்கும். இருப்பினும், எதிலும் அதிநம்பிக்கையுடன் கண்மூடி தனமாக செயல்படாதீர்கள், கவனமாக இருக்க வேண்டும். பன்னிரண்டாம் வீட்டில் இருக்கும் ராகு தொடர்ந்து பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும், அரசாங்கம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடல்நிலையில் அக்கறையின்றி இருந்தால், மருத்துவமனைக்குச் செல்ல நேரிடலாம்.

தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பதில் கவனம் கொள்ள வேண்டும். இல்லையெனில் உங்களுக்குச் சிக்கல்கள் ஏற்படலாம். இந்த ஆண்டு, வெளிநாட்டுப் பயணம் பற்றிய கனவை நனவாக்கலாம். நீண்ட நாட்களாக மனதில் அடக்கி வைத்திருந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். இதனால், மகிழ்ச்சி அதிகரிக்கும். முடிக்கப்படாத திட்டங்கள் அனைத்தும் இந்த ஆண்டு முடிவடையும். காதலிப்பவர்களுக்கு நல்லதொரு திருமண செய்திவரும். திருமணமானவர்களுக்கு, இந்த ஆண்டு அவர்களின் குடும்ப வாழ்க்கை சாதகமாக இருக்கும். மற்றவை உங்கள் விருப்பம்போல சிறப்பாக அமையும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களே, 2024-ல் பல தனித்துவமான அனுபவங்களை சந்திக்க நேரிடலாம். இந்த ஆண்டு, நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளில் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே நிறைய மன உளைச்சல்களையும், எதிர்பாராத செலவுகளையும் அனுபவிக்கலாம். ஆகையால், எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

எவ்வளவு தடைகள் வந்தாலும், அவற்றால் எதையும் நீங்கள் கைவிட மாட்டீர்கள் என்பதையும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் உங்களுக்கானது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு பணிபுரிபவர்கள் திறமைக்கேற்ற சம்பளம் பெறலாம். உங்கள் மனதில் உள்ள ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வீட்டில் உள்ள பெரியவர்கள் உங்களை முழு மனதுடன் ஆதரிப்பார்கள். குடும்பத் தொழிலை மேற்கொண்டால் இந்த ஆண்டு வெற்றி பெறுவீர்கள்.

ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்கள் சொத்துக்கள் வாங்க உகந்த மாதங்களாகும். காதலிப்பவர்களுக்கு இந்த வருடம் நன்றாகவே இருக்கும். இந்த ஆண்டு வெளிநாடு சுற்றுப்பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் பயணம் செய்ய விரும்பினால், கூடிய விரைவில் விசாவிற்கு விண்ணப்பிப்பது நல்லது. இந்த ஆண்டு உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

ஆண்டின் பிற்பகுதியில், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு, மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் குடும்பத்தில் இருக்கும் வயதானவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். எச்சரிக்கையாக இருப்பது பல சிக்கல்களைத் தவிர்க்க உதவும். பிறந்த இடத்திலிருந்து கொஞ்சம் தொலைவில் ஒரு வீட்டை வாங்க விரும்பினால், விருப்பப்படி வாங்க வாய்ப்புள்ளது.

மிதுனம்:மிதுன ராசிக்காரர்களே, இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே சற்று கோபத்துடன் இருப்பீர்கள். உங்கள் துணை உங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளாததால், அடிக்கடி பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கைக்கென போதுமான நேரத்தை செலவிட வேண்டும். இல்லையெனில், உங்கள் வாழ்க்கைத் துணையின் கோபத்திற்கு ஆளாகி, அதை சமாளிக்க முடியாமல் போய்விடும்.

வாழ்க்கைத் துணையின் உடன்பிறந்தவர்களும், சொந்தங்களும் உங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு அதிர்ஷ்டமளிப்பவர்களாக மாறலாம். அவர்களுடன் சேர்ந்து செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். இந்த ஆண்டு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த ஆண்டு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் உங்கள் லட்சியமும் நிறைவேறும். வெளிநாட்டு வியாபாரம் லாபகரமாக இருக்கும். சர்வதேச தொடர்புகளைக் கொண்டிருப்பது உங்கள் வருமானத்தை அதிகரிக்கவும், செல்வ வளத்தை அதிகரிக்கவும் உதவும்.

உடன்பிறந்தவர்கள் உங்களை நேசிப்பார்கள். ஆனால், குடும்பத்தில் சில குழப்பங்கள் இருக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை குறையலாம். வேலையில் மிகவும் பிஸியாக இருப்பதால், உங்கள் குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்க முடியாமல் போகலாம். நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பது இச்சமயம் வெட்டவெளிச்சமாகும். நண்பர்கள் உங்களுடன் நின்று உங்களின் பெரிய பிரச்சனைகளைத் தீர்ப்பதில் உங்களுக்கு உதவுவார்கள். மாணவர்கள் தங்கள் படிப்பு நிமித்தமாக, துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் உதவி பெறுவார்கள், சில வெற்றிகளையும் பெறுவார்கள்.

பணிபுரியத் தேர்ந்தெடுக்கும் எந்த துறையிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். வருட நடுப்பகுதியில் உங்கள் பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். சகோதர சகோதரிகளுக்கு மேலதிகமாக அலுவலக சக பணியாளர்கள் உதவுவார்கள். அதீத நம்பிக்கையில் ஈடுபடாமல் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட தகவல்களை யாரிடமாவது பகிர்ந்துகொண்டால் நீங்கள் பிரச்சனைகளில் சிக்கலாம்.

கடகம்:அதிக உணர்திறன் கொண்ட கடக ராசிக்காரர்களே, உறவினர்களுடன் இருப்பதே உங்களின் விருப்பமாக இருக்கும். இந்த ஆண்டு உணர்ச்சிகரமான அணுகுமுறையைக் காட்டிலும் நடைமுறை அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் அதிக பயனடையலாம். ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் வருவாயை உயர்த்த முயற்சிப்பீர்கள். குடும்பம் சார்ந்த செயல்களில் கவனத்தை செலுத்துவதோடு அவர்களின் உதவியுடன் சில முக்கிய முடிவுகளையும் எடுப்பீர்கள்.

இந்த ஆண்டு குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனத்தையோ அல்லது நீண்ட காலமாக குடும்பத்தில் இருக்கும் நிறுவனத்தையோ நிர்வகித்தால், அந்த நிறுவனத்தில் அதிக வருவாயைக் காணலாம். நீங்கள் சிறந்த நிதி நிலையை அடைவீர்கள். சர்வதேச பயணத்திற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் ராணுவம், விமானப்படை அல்லது காவல்துறை பணிகளுக்கு விண்ணப்பித்து, அவற்றில் சேர விரும்பினால் இந்த ஆண்டு வெற்றிபெற வாய்ப்புள்ளது.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உங்கள் தாயிடமிருந்து அதிக அன்பைப் பெறுவீர்கள். மேலும், அவர் உங்களுக்கு வழிகாட்டியாக இருப்பதால், நீங்கள் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் தந்தையின் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். உங்கள் தந்தையிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அவரைத் தனிக்கவனத்துடன் கவனிக்க முயற்சியுங்கள்.

நீங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவராக இருந்தால், சொத்து தொடர்பான சில ஆவணங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மாமியார் உங்களுக்கு நிறைய மதிப்புமிக்க விஷயங்களைக் கற்றுக் கொடுப்பார். எந்தவொரு குறிப்பிடத்தக்க விஷயத்திலும் உங்களுக்கு பெரும் உதவியாக இருப்பார்கள். இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்வது அவசியம்.

சிம்மம்:சிம்ம ராசிக்காரர்களே, இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிறுத்தப்பட்ட உங்களின் முன் முயற்சிகள் வேகமெடுக்கும். வியாபார முயற்சிகளை முன்னேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் நிறுவனத்தை வளர்ப்பது மட்டுமே உங்கள் குறிக்கோளாக இருந்தால் இந்த ஆண்டு நீங்கள் வெற்றியடைவீர்கள்.

இந்த ஆண்டு எதிர்பாராத விதமாகச் செல்வந்தராவதற்கு வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இருப்பினும், ஆண்டின் தொடக்கத்தில், நீங்கள் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் குடும்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் தவறான பேச்சுவார்த்தைகள் சிக்கல்களை ஏற்படுத்தலாம். வேலை காரணமாக பல சமயங்களில் வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உயர்கல்வியிலும் இந்த ஆண்டு பலன் கிடைக்கும்.

இந்த ஆண்டு நீங்கள் முன்னேறுவீர்கள். வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் படிப்படியாக முன்னேற்றம் காண்பீர்கள். இந்த ஆண்டின் நடுப்பகுதியில், நீங்கள் சிறந்த இடத்தை அடைவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை உயரும். இதனால் உங்கள் மனம் திருப்தியடையும். நீங்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தால், உங்கள் நிறுவனம் கூட்டத்திலிருந்து தனித்து தனித்துவம் பெற்று நிற்கும். இதிலிருந்து நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கையையும் பெறுவீர்கள்.

உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உங்களைப் பெரிய அளவில் சாதிக்க வைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருப்பதால் நல்ல பலனைப் பெறுவீர்கள். இது ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் நினைத்த எந்த முயற்சியிலும் வெற்றி பெறுவீர்கள். இது சமுதாயம் உங்களை நன்கு அறிய உதவக்கூடும். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு புதிய தொழில் தொடங்கினால் சிறப்பாக இருக்கும். நீங்கள் மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் செய்ய விரும்பினால், பயணத்தை இனிதே மேற்கொள்வீர்கள்.

கன்னி:கன்னி ராசிக்காரர்களே, இந்த ஆண்டின் ஆரம்பமே உங்களுக்கு கடினமாக இருக்கும். தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும் மன அழுத்தத்திலிருந்து உங்களை விடுவிக்க நீங்கள் பெரும் முயற்சி எடுக்க வேண்டும். இந்த சிக்கலைத் தீர்க்க உங்களுக்கு ஒரு வழிகாட்டி தேவைப்படலாம். அதன் பிறகு, நீங்கள் ஆண்டு முழுவதும் படிப்படியாக முன்னேறுவீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.

உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களும் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள். நீங்கள் தனிமையாக இருப்பதையும், உங்கள் மீது நீங்களே கோபப்படுவதையும் தவிர்க்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட வளர்ச்சியில் மற்றவர்களை ஒதுக்கும் எண்ணத்தைத் தவிர்க்க வேண்டும். இந்த ஆண்டு போட்டிக்கான வாய்ப்புகள் அதிகம். அரசியலில் இருப்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க வெற்றியும் முக்கிய பதவியும் கிடைக்க வழிவகுக்கும்.

இந்த ஆண்டு நீங்கள் வெளிநாடு செல்வதற்கான நல்ல வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் வேலையில் சில புதிய முன்னோக்குகளைச் சேர்க்க தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். உதவி தேவைப்படுபவர்களுக்குத் தொடர்ந்து உதவி செய்யுங்கள். இதை செய்தால் இந்த ஆண்டு உங்களால் நிறைய சாதிக்க முடியும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். இந்த ஆண்டும் குடும்ப வாழ்க்கையில் பல உயர்வு தாழ்வு இருக்கலாம். தனிமையில் உங்களைப் பற்றி யோசித்து முடிவுகளை எடுக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சட்ட விவகாரங்களில் வெற்றி பெறுவீர்கள். ஆண்டின் நடுப்பகுதியில் சமூக அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். இந்த ஆண்டு பல பரிசுகளைப் பெறுவீர்கள். இதனால், மகிழ்ச்சி அடைவீர்கள். பணத்தின் மதிப்பை அறிந்து, தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். இந்த ஆண்டு ரியல் எஸ்டேட் தொழிலில் வெற்றி பெறவும், கணிசமான சொத்துக்களை வாங்கவும் சிறந்த வாய்ப்புள்ளது.

துலாம்:துலாம் ராசிக்காரர்களே, வாழ்க்கையில் நல்லிணக்கத்தை மதிப்பீர்கள். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே உங்கள் இலக்குகளை அடைய முயற்சி செய்வீர்கள். முயற்சிக்குப் பிறகு வாழ்க்கையை இன்னும் அழகாக பார்ப்பீர்கள், வாழ்க்கையில் புத்துணர்ச்சியைப் பெறுவீர்கள். அனைத்திலும் வெற்றியடைவீர்கள். உங்கள் சொந்தங்களைச் செயல்களாலும், வார்த்தைகளாலும் என் சொந்தங்கள் என்று பெருமிதத்துடன் கூறுவீர்கள்.

நிறுவனமாக இருந்தாலும் சரி, வேலை செய்பவராக இருந்தாலும் சரி, சுயதொழிலாக இருந்தாலும் சரி நீங்கள் எல்லாவற்றிலும் சிறந்தவராக இருப்பீர்கள். குடும்பத்திலும், நற்பெயரை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் தகராறு ஏற்படலாம். குடும்பத்திலுள்ள வயதானவர்கள் உங்களிடம் அன்பைக் காட்டலாம். அவர்களின் ஆசீர்வாதத்துடன் உங்கள் வேலையில் வெற்றி காண்பீர்கள்.

வெளிநாட்டுப் பயணத்திற்குத் தயாராகும் நபர்கள் ஆரம்பத்தில் சில சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம். உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். இந்த ஆண்டு காதலிப்பவர்களுக்கு கொஞ்சம் கடினமான காலகட்டமாகவே இருக்கும். ஆனால் இதை உங்கள் வாழ்க்கையில் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அகிம்சையான வழியில் போராடினால், நீங்கள் விரும்பியவரை கரம்பிடிக்கும் வலிமையை அன்பு உங்களுக்கு வழங்கும்.

குடும்ப வாழ்க்கையில் நல்ல செய்திகள் வரும். உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார்கள். இந்த ஆண்டு உங்கள் தாய்மாமனுடன் கருத்து வேறுபாடுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கலாம். ரியல் எஸ்டேட் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் தொடர்பாக வாங்குவதும் விற்பதும் லாபத்தைத் தரும். ஆண்டின் நடுப்பகுதியில், உங்களுக்கு அதிஷ்டம் சாதகமாக இருக்கும். மேலும், ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பிடத்தக்க நிதி ஆதாயங்களுக்கான வாய்ப்புள்ளது.

விருச்சிகம்:விருச்சிக ராசிக்காரர்களே, நீங்கள் விஷயங்களை மறைத்து வைப்பதில் வல்லவர்கள். இந்த ஆண்டு உங்களின் இந்த பண்பினால் நீங்கள் லாபம் பெறலாம். உங்கள் மறைமுகமான இலக்குகளை நீங்களே ரகசியமாக வைத்துக்கொண்டால் வாழ்க்கையில் நிறைய சாதிக்கலாம். ஒரு அற்புதமான ஆண்டில் அடியெடுத்து வைக்கிறீர்கள். மற்றவர்களை ஈர்க்கும் வசியம் உங்களிடத்தில் இருப்பதால் மக்கள் உங்களிடம் ஈர்க்கப்பட்டு ரசிகர்களாகக்கூட மாறுவார்கள். இதன் மூலம் ஒரு பெரிய வேலையைச் செய்து முடிப்பீர்கள்.

குடும்ப வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த ஆண்டு உயர்வு தாழ்வு இருக்கலாம். நீங்கள் அடிக்கடி அதிகமாகப் பேசுவீர்கள். இது மற்றவர்களுக்கு எரிச்சலூட்டலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படலாம். நீங்கள் ரியல் எஸ்டேட் வாங்க விரும்பினால் இந்த ஆண்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தின் அடிப்படையில் சமூகத்தில் உங்கள் நிலை உயரக்கூடும். உங்கள் தொழிலிலும் வியாபாரத்திலும் வெற்றி என்பது கடின உழைப்பால் மட்டுமே கிடைக்கும்.

இந்த ஆண்டு மே மாதத்திற்குள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் கைகூடும். காதல் திருமணம் செய்யப் போராடுபவர்களும் வெற்றியடைவார்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். சில சமயங்களில் தொடர்ந்து பரிசோதனை செய்ய வேண்டும். ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்புள்ளது. அதன்மூலம் ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்க நினைப்பீர்கள்.

புதிய நிறுவனத்தில் கவனம் செலுத்துவதால் உங்கள் தற்போதைய வேலை சிதைந்து போகலாம். அதை கருத்தில் கொள்வதால் புது நிறுவன வேலையும் தடைபடலாம். எனவே எதையும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு கவனத்துடன் செய்ய வேண்டும். இந்த ஆண்டு, உங்கள் விருப்பங்களில் பெரும்பாலானவை நிறைவேறக்கூடும், எனவே மகிழ்ச்சியாக இருங்கள். உங்கள் மீது அன்பு காட்டுபவர்கள் யாராக இருந்தாலும் மதியுங்கள். நீங்கள் யாரையும் ஏமாற்றக்கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். இதன்மூலம் இந்த ஆண்டு முழுவதும் வெற்றி பெறுவீர்கள்.

தனுசு:தனுசு ராசிக்காரர்களே, நீங்கள் இயல்பிலேயே பொறுப்புணர்வும், கொண்ட நோக்கத்தில் உறுதியாகவும் இருப்பவர். எளிதில் நிதானத்தை இழந்தாலும், நோக்கங்களை நிறைவேற்றுவது உங்களின் பலமாகும். இந்த ஆண்டு புதிய உயரங்களை அடைவதற்கான இலக்குகளை நீங்கள் அடைய முடியும். ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். இது உங்கள் வாழ்க்கையின் பல அம்சங்களில் வெற்றிக்கு வழிவகுக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். ஆண்டின் முதல் நாளிலேயே பண ஆதாயம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

தேவைகளுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் தயக்கமின்றி கணிசமான அளவு பணத்தை செலவிடலாம். உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் அடிக்கடி தியானம் செய்வதை ஒரு வழக்கமான செயலாக வைத்துக்கொள்வதன் மூலம் உங்கள் உடலை கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு குடும்பத்தில் பல வழிகளில் பிரச்சனை ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை இல்லாததால் அவ்வப்போது தகராறு ஏற்படலாம். வீட்டிலும் மகிழ்ச்சியின்மையை அனுபவிக்கலாம்.

வேலையில் மிகவும் பிஸியாக இருப்பதால், வீட்டில் அதிக கவனம் செலுத்த முடியாது. வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் அதிர்ஷ்டம் கைகொடுக்கும். இந்த ஆண்டு கார் வாங்குவதற்கு அதிக வாய்ப்புகள் இல்லாததால் கார் வாங்க விரும்புவோர் சரியான நேரத்தைப் பார்த்துக் காத்திருக்க வேண்டும். நீங்கள் நிறைய வேலைகளை முடிக்க முயற்சி செய்வீர்கள். இது வாழ்க்கையில் முன்னேறவும் உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தவும் உதவும்.

நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், சுயதொழில் செய்பவராக இருந்தாலும் ஒவ்வொரு திறனில் சிறப்பாக செயல்படுவீர்கள். இந்த ஆண்டு, உங்கள் உடன்பிறந்தவர்களில் ஒருவருக்கு உதவ வாய்ப்பு கிடைக்கும். இது உங்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக இருக்கலாம். அவர்களுடனான உங்கள் உறவை மேம்படுத்துவதற்கு கூடுதலாக நீங்கள் அவர்களுக்கு இந்த வழியில் உதவினால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் உங்களை நினைவில் வைத்திருக்கலாம்.

மகரம்:மகர ராசிக்காரர்களே, இந்த ஆண்டு மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டு வருமானம் அதிகரிக்கலாம். உங்கள் முந்தைய முயற்சிகளின் விளைவாக, இப்போது பணம் பெறலாம். செலவுகள் அதிகமாக இருந்தாலும், உங்கள் சம்பளம் அதிகமாக இருப்பதால் எல்லா பணிகளையும் முடிக்க முடியும். இதுவரை நீங்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு பிரச்சினையும், சிக்கல்களையும் பொருட்படுத்தாமல், இறுதியில் மறந்து போகலாம்.

குடும்பத்தைப் பொறுத்தவரை இந்த வருடத்தை சிறப்பாகத் துவங்குவீர்கள். பெற்றோரும் உங்களுக்குப் பக்கபலமாக உதவியாகவும், ஆதரவாகவும் இருப்பார்கள். அவர்களின் ஒப்புதலுடன், உங்கள் நிறுவனம் வளரக்கூடும். சில முக்கியமான தேர்வுகளைச் செய்ய இது உங்களை அனுமதிக்கலாம். ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

பணப்பற்றாக்குறையால் எந்த வேலையும் நிறுத்தப்படாது. அதனால் நீங்கள் மனதளவிலும் உடலளவிலும் நன்கு ஓய்வெடுக்கலாம். சமூக வட்டம் விரிவடையலாம். சமூக ஊடகங்களில் உங்களைப் பின்தொடர்பவர்கள் அதிகரித்து வருவதன் விளைவாக, இந்த ஆண்டு நீங்கள் நிறைய வெகுமதியைப் பெறப் போகிறீர்கள். உங்கள் ஆன்லைன் அடையாளத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். வெளியூர் பயணம் செய்து உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

எப்படிப்பட்ட பொழுதுபோக்கையும் வெளிப்படுத்த இது சிறந்த தருணம். பயணம் இன்னும் தொடரலாம். நீங்கள் நண்பர்களுடன் சந்திப்புகளை ஏற்பாடு செய்வீர்கள் மற்றும் உங்களை புத்துணர்வாக வைக்க விரைவான பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்கள் குடும்பத்தை புனித தலங்களுக்கோ அல்லது அழகான விடுமுறைகால இடங்களுக்கோ அழைத்துச் செல்வதால் உங்கள் உறவுக்குப் புத்துயிர் அளிக்கும். உங்கள் கடுமையான பேச்சு எப்போதாவது உங்களைப் பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்லலாம்.

ஏனென்றால் நீங்கள் உண்மையைப் பேசினாலும், அது மற்ற நபரை புண்படுத்தும் வகையில் மிகவும் கடுமையான முறையில் இருக்கும். எனவே வேலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரிடமும் கடுமையான யதார்த்தத்தைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம். மதம் தொடர்புடைய விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பம்:கும்ப ராசிக்காரர்களே, நீங்கள் இயல்பிலேயே ராஜதந்திரிகள். உங்கள் வார்த்தைகளால் மற்றவர்களை ஆச்சரியப்படுத்துவீர்கள், அவர்களை ஒப்புக்கொள்ள வைப்பீர்கள். ஆண்டு முழுவதும் அதிபதியான சனிபகவான் உங்கள் ராசியில் தங்கியிருப்பதால் உங்கள் ஆளுமையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அனுபவம் வாய்ந்தவராகத் தோன்றுவீர்கள். உங்கள் வேலையில் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே முடிக்கக்கூடிய புதிய பணிகள் உங்களுக்கு வழங்கப்படலாம்.

இது இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்கக்கூடும். வெகுமதி பெறக்கூடிய ஒன்றைச் சாதிப்பீர்கள். இந்த ஆண்டு பொதுத்துறையிலிருந்து குறிப்பிடத்தக்க வெகுமதிகளைப் பெறலாம். நீங்கள் வெளிநாடு செல்ல சிறந்த மாதங்கள் பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகும். மத விஷயங்களில் மிகவும் ஆர்வமாக இருப்பீர்கள். நீங்கள் மசூதி, கோயில் அல்லது பிற வழிபாட்டுத் தலத்தில் தன்னார்வத் தொண்டு செய்ய விரும்புவீர்கள்.

வழிபாட்டுத் தலத்துடன் தொடர்புடைய சமூகத்தில், நீங்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்கலாம். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் உங்கள் பணி வெளிப்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குறிப்பிடத்தக்கச் சிக்கல்கள் எதுவும் இருக்காது. ஆனால் கேது உங்களுக்கு சில மறைக்கப்பட்ட சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் ஒரு அழகான குடும்ப வாழ்க்கையைப் பெறுவீர்கள். உங்கள் குடும்பத்துடன் ஒன்றாக திட்டமிட்டு விடுமுறைக்குச் செல்லலாம். உங்கள் குடும்பம் எப்போதும் உங்களுக்காக இருக்கும். அவர்களின் அன்பு ஒருபோதும் குறையாது. இந்த ஆண்டு, மூத்த உடன்பிறப்புகள் உங்களுக்கு பெரும் உதவியாக இருப்பார்கள். உங்களின் நிதி நிலைமையை மேம்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.

மீனம்:மீன ராசிக்காரர்களே, நீங்கள் இயற்கையாகவே உழைப்பாளிகள் மற்றும் கல்வியில் மதிப்பு மிக்கவர்கள். இந்த ஆண்டு, பிரச்சினைகள் மோசமடைவதை தடுக்க உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். ஆண்டு முழுவதும் ராகு உங்கள் ராசியில் இருக்கிறார். இது உங்கள் வார்த்தைகளும் செயல்களும் பொருந்தக்கூடிய விதத்தை பாதிக்கலாம்.

வாக்குறுதிகளைப் பின்பற்ற முடியாமல் போகலாம். இதன் விளைவாக உணர்ச்சிகரமான பின்னடைவைச் சமாளிக்க வேண்டும். உங்களால் நிறைவேற்ற முடியாத ஒன்றைப் பற்றி ஒருவரிடம் பேசுவது, அவர் உங்களைப் பற்றி மோசமாகப் பேசவும், உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவும் வழிவகுக்கும். நீங்கள் திருமணமானவர்களானாலும் அல்லது காதலிப்பவர்களாக இருந்தாலும், உங்கள் துணையைப் புண்படுத்தும் எதையும் கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் 7வது வீட்டில் தற்போது கேது இருக்கிறார். இது சண்டையை ஏற்படுத்தலாம். அதைக் கவனமாக கையாள வேண்டும். இந்த ஆண்டு நீங்கள் வெற்றிகரமான தொழிலைப் பெறுவீர்கள். அரசாங்கத் துறையில் பதவி கிடைப்பதும் சாத்தியமாகும். இதன் விளைவாக உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். வியாழனின் ஆசியால், வருமானமும் வங்கிக் கணக்கு இருப்பும் உயரக்கூடும். நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றால், ஆண்டின் முதல் காலாண்டில் தவிர்க்க வேண்டும்.

உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே திருப்தியாக இருப்பார்கள். இது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் உங்களுக்கு உதவக்கூடும். ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் உடன்பிறந்தவர்கள் உங்களுக்குத் துணையாக இருப்பார்கள். அவர்களுடன் நீங்கள் வெகுதூரம் செல்லலாம். நீங்களும் உங்கள் வாழ்க்கைத்துணையும் நீண்டதூர பயணம் செல்வீர்கள். மேலும், நீங்கள் பகிரும் அன்பு அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.

ABOUT THE AUTHOR

...view details